| அறிந்தோ ளயர்ப்பின் அவ்வழி மருங்கிற் |
| கேடும் பீடும் கூறலும் தோழி |
| நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி |
| மடன்மா கூறும் இடனுமா ருண்டே |
(11) |
க - து : | களவொழுக்கத்தின்கண் தலைமக்கட்கும் சிறுபான்மை ஏனைய துணை மாந்தர்க்கும் உரியவாக அமையும் உணர்வுப் பகுதிகளையும் கூற்றுப் பகுதிகளையும் தொகுத்து இரண்டு சூத்திரங்களான் மேற்கூறினார். இனித் தலைவன் தலைவி முதலனோர்க்குக் களவின் கண் கூற்று நிகழுமிடமும் அவை நிகழுமாறும் கூறத்தொடங்கி இச்சூத்திரத்தான் இயற்கைப் புணர்ச்சி முதலாகத் தோழியிற்புணர்வு ஈறாக நிகழும் ஒழுகலாற்றினுள் தலைவன் கூற்று நிகழுமிடமும் அவன் கூற்று நிகழ்த்துமாறும் கூறுகின்றார். |
குறிப்பு: இருவகைக் கைகோளுள்ளும் தலைவன் தலைவியர்க்குரியவாக ஓதப்பெறும் கிளவிகள் யாவும் அகத்திணை புறத்திணைகளுள் உலகியலான் வகுத்துக் கூறப்பெற்ற அந்தணர் முதலிய நாற்பாலார்க்கும் வேந்தனாற் சிறப்பு நிலை எய்தியோர்க்கும் வினைவல பாங்காயினார்க்கும் உரியவாகப் புலனெறி வழக்குப் பற்றிக் கூறப் பெறுவனவாகும். அவை யாவும் ஒவ்வொருவர் மாட்டும் நிகழ்வனவோ நிகழ வேணடுவனவோ அல்ல. சில பொதுவாகவும் சில நாற்பாலார்க்கும் பிறர்க்கும் சிறப்பாகவும் அவரவர்க்கேற்ப நிகழும். சில நிகழாமற் போதலும் அமையும். இவை யாவும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய செய்யுளாக்கத்திற்குரிய இலக்கண மரபுகள் என்பதனை உணர்ந்து ஆசிரியர் கூறுவனவற்றை அறிதல் வேண்டும். |
வரைதற்கு ஏதுவாகிய கொண்டுதலைக் கழிதல் பிரிந்தவண் இரங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் பிரிவு பற்றிய ஒழுகலாறுகளாதலின் அவைபற்றிய இலக்கணங்களை அகத்திணையியலுட் கூறினார் ஈண்டுப் பிரிவொழுக்கமல்லாத ஏனைய ஒழுகலாற்றிற் குரியவற்றையே ஓதுகின்றார் என அறிக இவ்விளக்கம் இனிவரும் கற்பியலுள் கூறப்படும் கிளவிகட்கும் பொருந்தும். |
பொருள் : (1) மெய்தொட்டுப் பயிறல் என்பது: தலைவியின் வேட்கையையும் ஒருதலையுள்ளுதலாகிய குறிப்பையும் அறிந்த தலைவன் அவள் மாட்டுநிகழும் அச்சமும் நாணமும் நீங்குதற் பொருட்டு அவள் மெய்யினைத் தண்டற்கு முயல்தல். முயலுங்கால் சில நிகழ்த்துதலும் கொள்க. பாலதாணையான் வேட்கை ஒத்து நிற்றலைப் புகுமுகம் புரிதலான் தெளிந்த தலைவன் அவள் மெய்யினைத் தீண்டற்கு அணுகுங்கால், பொறிநுதல் வியர்த்தல் முதலாக இல்வலியுறுத்தல் ஈறாகத் |