தலைவியின்பால் நிகழும் உணர்வு வெளிப்பாடுகள் இடையறவு செய்தலான் தீண்டற்குப் பல்வழியானும் முயலுதல் தோன்றத் தொடுதல் என்னாது 'பயிறல்' என்றார். அங்ஙனம் முயன்று தலைவியது மெய்யைத் தீண்டுதல் பின்னர் இடம் பெற்றுத் தழாஅல் என்பதன்கண் நிகழுமாதலின் பயிறல் என்றது தீண்ட முயலுதல் என்னும் பொருள்பட நின்றவாறுணர்ந்து கொள்க. "தொடற்கு" என்னும் வினையெச்சம் "வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய" (சொல் - 458) என்றதனான் செய்தென் எச்ச வாய்பாடுபட நின்றதென அறிக. |
2) பொய்பாராட்டல் என்பது : தலைவியது மெய்யினைத் தீண்டற்கு முயலும் தலைவன் ஓர் ஏதுவைக் கற்பித்துக் கொண்டு அதன் வாயிலாக அவள் நலத்தினைப் பாராட்டுதல். அஃதாவது, 'அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள்' என அதனை நீக்குவான் போலவும்,மெல்லிடை யாதலின் அவள் சூடிய கண்ணியில் தும்பி சென்று சேரின் நலியும் என அதனை ஓச்சுவான் போலவும் நெருங்குதல். இதனை அகப்பொருட்கோவை நூலார் வண்டோச்சி மருங்கணைதல் என்னும் துறையாகக் கூறுவர். |
3) இடம்பெற்றுத்தழாஅல் என்பது : பொய்பாராட்டித் தலைவன் அணுகிய வழி நாணொடுங்கி இல்வலியுறுத்தி நிற்கும் தலைவி புனலோடும்வழிப் புற்சாய்ந்தாற்போல உணர்வு வழிப்பட்டு நிற்றலை வாய்ப்பாகக் கொண்டு அவள் மெய்யினைத் தீண்டி அகப்படுத்தலாம். இடம் என்றது தலைவியின் உடன்பாடாகிய வாய்ப்பினை. அவள் உடம்பட்டு நிற்கும் நிலையைப் பெறுதல் என்றார். இதனை "இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்" என்பது போலக் கொள்க. தழுவுதல் என்றது கையால் அணைத்தலை. என்னை? கூடுதலுறுதலும் நுகர்ச்சியும் பின்னர் நிகழ்வனவாகக் கூறுதலின் என்க. |
4) இடையூறு கிளத்தல் என்பது : தலைவன் ஒருகையினான் அவளை அணைத்தவழி இதுகாறும் உறாததோர் ஊற்றுணர்ச்சியான் ஒடுங்கி நின்ற நாண் மீதூரப்பெற்று அவன் தளையினின்று விலகி நாணத்தாற் புரியும் சில செயல்கள் கூட்டத்திற்கு இடையூறாதலைத் தலைவன் எடுத்தியம்புதலாம். |
அவ் இடையூறுகளாவன: தலைவி ஒரு மரக்கொம்பினையோ மலர்க் கொடியினையோ சார்ந்து தன்னை மறைத்து நிற்றலும் |