களவியல்29

பாங்கனே  எனவும்  அவனை  நாடி  ஆவன  புரிதல் வேண்டும் எனவும்
கருதிக் கூறல்  நிகழ்பவை  உரைத்தலாம். உரைத்தல் பெரும்பான்மை தன்
நெஞ்சொடும் சிறுபான்மை பாங்கனொடும் நிகழும் எனக் கொள்க.
 

இது பாங்கற் கூட்டத்திற்குரிய கிளவி என்பது குற்றங்  காட்டிய வாயில்
பெட்பினும் என மேல்வருங் கிளவியான் அறியப்படும். பாங்கன் தலைவனது
வாட்டத்தையும்,     சோர்வையும்     நோக்கி     உற்றது   வினாதலும்
வினாவியறிந்தவழிக் கழறியுரைத்தலும்  பிறவும்   ஈண்டே  கொள்ளப்படும்
என்க.
 

மற்றுப் பாங்கன் கூட்டத்தைத்  தனித்துப்  பிரித்துக்  கூறாதது என்னை
எனின்? பாங்கன் கூற்றுப் பெரும்பான்மையும் தலைவனாற் கொண்டெடுத்து
மொழியப்பட்டு வருதலான் நூலோர் தலைவற்குரிய கிளவியுள் அடக்கினார் என்க.
 

12) குற்றங்காட்டிய   வாயில்   பெட்பினும்   என்பது  :   தலைவனது
குலப்பிறப்பு அறிவாற்றல் தகுதி போன்றவற்றை  எடுத்துக்காட்டிப் பாங்கன்
கழறியவிடத்துத் தலைவன்   தன்   நிலைமாறாமை   கண்டு,  இனி இவன்
ஆற்றாமையான்  இறந்துபடின்  ஏதம்  பெரிதாம்  என  அஞ்சித்  துணை
புரிவானாக, நின்னாற் காணப்பட்ட உரு  எத்தன்மைத்து எவ்விடத்தது என
வினாய   வழித்   தலைவன்  கூற்று  நிகழும் என்றவாறு. அஃதாவது தன்
துயரைக் களையப் பாங்கன்  விருப்பமுடையானாதற்கண்  தலைவன் கூற்று
நிகழும்   என்றவாறு.  இவை   இரண்டும்    பாங்கற்    கூட்டத்திற்குரிய
கிளவிகளாம்.
 

பிரிந்தவழிக் கலங்கல், நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைத்தல், குற்றங்
காட்டிய   வாயில்பெட்புறல்  ஆகிய   மூன்றும்    அகனைந்திணைக்கண்
கைக்கிளைப் பகுதியாக நிகழும்.
 

நச்சினார்க்கினியர்    பாங்கன்   இடஞ்சுட்டிச்   சென்று  தலைவனை
எய்துமாறு   கூறலன்றி   இடைநின்று   கூட்டுவித்தலின்மையான்  பாங்கற்
கூட்டம்  என்றது  தலைவன் பாங்கனைக் கூடும் கூட்டம் என்றும் அதுவும்
இடந்தலைப்பாட்டின் பகுதியேயாம் என்றும் கூறுவார்.
 

தலைவன்  இடந்தலைப்பாட்டின்கண்  தலைவியை அடைதற்கு இயலாத
நிலையில் பாங்கன் அவள் ஆடிடம் அறிந்து கூறிக்   கூட்டுவித்தலின் அக்
கூட்டத்திற்குப் பாங்கன் துணையும், காரணமும் ஆதல் தெளியலாம். களவுக்
கூட்டத்தை