32களவியல்

அடைந்தமையும்  அவளும்  தன்  பிரிவாற்றாமை  தோன்றத் தலைவியைத்
தழுவிக் கொண்டமையும் கண்டிருந்தானாதலின் அவளே இவட்கு உயிரன்ன
பாங்கி எனத் தலைவன் அறிந்தானாயினான் என்க. பெறுதல் = தோழியைத் துணையாகப்  பெறுதல்.  இரவு = தான்  எளியனாய்  இரந்து பின்னிற்றல்.
எ-டு : வந்துழிக் கண்டுகொள்க.
 

14) ஊரும் பேரும் கெடுதியும்  பிறவும்  நீரிற்குறிப்பின்  நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும்  பகுதியும் என்பது  :  இரந்து பின்னிற்றலைக்கருதி
தலைவன் தலைவியும் தோழியும் தனித்திருந்த செவ்வி  நோக்கிச்   சென்று
நீவிர் வாழும் இடம் யாது? எனவும் நும்பெயரறியும் வேட்கையேன் எனவும்
யான்  கெடுத்திழந்த   பொருள்   இவ்வழி  வரக்கண்டனிரோ?   எனவும்
வினவுவான் போலத் தன்  நெஞ்சத்து நீர்மை விளங்கும் குறிப்பினான் தன்
நோக்கம்  தோழியின்   உள்ளத்தே   நிரம்புமாறு   தன்    குறையினைத்
தெரிவிக்கும் பகுதிக்கண்ணும் என்றவாறு.
 

தலைவன்   தன்  உள்ளக்கிடக்கையைத்   தோழி   நன்கறியுமாற்றான்
கூறுவான்   என்பது  விளங்க  'நிரம்பக்   கூறி'   என்றார்.    தலைவன்
குறிப்பினைத்   தோழி    முற்றும்   உணர்ந்து கொள்ளுதலைப் பின்னர்த்
தோழிக்குரிய  கிளவிகள்   கூறுமிடத்து  "இருவரும்  உள்வழி அவன் வர
உணர்தல்' என ஓதுமாற்றான் அறிக.
 

'பிற'   என்றதனான்  நும்  ஊர்க்குச்  செல்லும் வழியாதெனவும் வாய்
வாளாதிருப்பது  என்?  எனவும் வினாதல் கொள்க. இதனை வழிவினாதல்,
ஒழிந்தது வினாதல் என்ப கோவை நூலார். இங்ஙனம் ஊர் வினாதல் முதல்
பலவாறாகத் தலைவன் தன் குறிப்பினை உணர்த்தலின் 'குறையுறும்  பகுதி'
என்றார்.
 

கெடுதிவினாதலாவது,  மானும்   மரையும்   யானையும்  பிறவும்  தன்
வேட்டைக்குத்   தப்பிப்  புண்ணொடு  இவ்வழிப்  போந்தனவோ?   என
வினாதலும்  என்  நெஞ்சும் உணர்வும் இழந்தேன் அவற்றைக் கண்டிரோ?
என வினாதலுமாம்.
 

பகுதி  என்றனான்  தோழி  தனித்திருந்த  விடத்து அவற்றுள் ஏற்பன
கூறிக் குறையுறுதலும்  தழையும்  கண்ணியுமாகிய கையுறை தந்து ஏற்குமாறு
கூறுதலும் பிறவும் கொள்க. இவை தோழி மதியுடம்பாட்டிற்குக்  காரணமாக
அமைதலைத் தோழிக்குரிய கிளவிகளுள் கண்டு கொள்க.