தொல்காப்பியப் பொருட்  படலத்தில்   தலைவன்,    தலைவி, தோழி,
செவிலி, காமக்கிழத்தி முதலியோர் ஒழுகலாறுகளாகவும்   கூற்றுக்களாகவும்
சுட்டப்பட்டுள்ள  பல   செய்திகளுக்குச் சங்க   இலக்கியத்   தொகுப்பில்
எடுத்துக்காட்டு இல்லை. அங்ஙனமே சங்க  இலக்கியம்   குறிப்பிடும்   பல
செய்திகளுக்குத்   தொல்காப்பியப்   பொருட்படலத்தில்   குறிப்பிடத்தக்க
வகையில் நூற்பாவோ   நூற்பாத்   தொடரோ   இல்லை. சில நூற்றாண்டு
இடைவெளிக்குள் ஏற்பட்ட புதுமை இது.
 

தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் அஃது உரையின்றிப்   பலராலும்
எளிதின் புலங்கொள்ளப்பட்டமையின் அக்காலத்தில் அதற்கு உரை எழுதும்
தேவை   ஏற்பட்டிலது.    பற்பல நூற்றாண்டுகட்குப்   பின்னரே அதற்குச்
சான்றோர் பலரான் உரைகள்  வரையப்பட்டன.   தம்காலத்து   வடமொழி
வேதங்களிலும்   மிருதிகளிலும்    குறிப்பிடப்பட்ட   செய்திகள்   பலவும்
தொல்காப்பியருக்கும் உடன்பாடாதல் வேண்டும் என்ற கருத்துக் கொண்டே
அச்சான்றோர் தொல்காப்பியப் பொருட்படலத்திற்கு  உரை   வரைந்தனர்.
அவருள்   முற்பட்ட   இளம்பூரணர் உரையை அரில்தபக் கற்ற ஆசிரியர்
நச்சினார்க்கினியர்  அவ்வுரையை   மூலத்தொடு   இணைத்துப்   பல்கால்
நோக்கி இயன்றவரை தொல்காப்பியச் செய்திகளுக்கு   எடுத்துக்காட்டுக்கள்
தருதல் வேண்டும் என்னும்  வேணவராவாலும்    சங்க   இலக்கியத்துக்கு
இயன்றவரை   தொல்காப்பியச்    செய்திகளுக்கு   எடுத்துக்காட்டுக்களாக
இலங்கும் வாய்ப்பினை  நல்குதல்   வேண்டும்   என்ற   நல்விழைவாலும்
தொல்காப்பிய நூற்பாக்களுக்கு ஒரோவழி மொழிமாற்றியும் சற்று  வலிந்தும்
பொருள்கொள்வாராயினர்.
 

இக்காலத்துத்   தொல்காப்பியம்   குறிப்பிடும்     செய்திகள்   தனித்
தமிழ்ப்பண்பை  அடிப்படையாகக்   கொண்டிருத்தல்   வேண்டும்   என்ற
கோட்பாட்டினை உளங்கொண்ட சான்றோருள் ஒருவராகிய  பாலசுந்தரனார்
வடமொழித்  தொடர்பு   கொண்டு   நச்சினார்க்கினியர்   வரைந்த   பல
பகுதிகளுக்கு அவர் உரையை விடுத்துச்   சில  இடங்களில் இளம்பூரணரை
ஒட்டியும் பல இடங்களில் தம் கருத்தை வெளிப்படுத்தியும்    இப்பொருட்
படல   உரையை   வரைந்துள்ளார்.  நச்சினார்க்கினியர் வலிந்து பொருள்
செய்தமை போலவே இவரும் பொருள் செய்துள்ள   நூற்பாக்கள் பல உள.
இச் செய்திகளை உளங்கொண்டு   இவ்வாராய்ச்சிக்    காண்டிகையுரையை
நோக்குவோமாக.
 

இளம்பூரணர்,   நச்சினார்க்கினியர்   ஆகிய   இருவரின்   உரையைக்
களவியல் முதலாய இயல்களுக்கு உரைவளம் என்ற