| ஆற்றினள் என்பது கேட்டனம் ஆற்றா |
| என்னினும் அவளினும் இகந்த |
| இன்னா மாக்கட்டிந் நன்ன ரூரே (நச்-மேற்) |
| தோளுங் கூந்தலும் பலபா ராட்டி |
| வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோற் |
| குட்டுவன் தொண்டி யன்னவெற் |
| கண்டு நயந்துநீ நல்காக் காலே |
(ஐந்குறு-178) |
எனவரும். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
20) தோழி நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி என்பது : [உம்மையை நிலைமை நோக்கியும் என மாற்றிக் கூட்டிப்பொருள் கொள்க] இவ்விடத்துக் காவலர் கடுகுவர், எம் ஐயர்காணின் ஏதமாம், உலகியலான் வந்து தலைவியைப் பெறுக எனத் தோழி சேட்படுத்திக் கூறிய நிலையை எண்ணிக் கையற்றுக் கூறலும் என்றவாறு. |
| எ - டு : | பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் |
| பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும் மற்றுஇவள் |
| உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய |
| தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் |
| முறையுடை யரசன் செங்கோல் அவையத்து |
| யான்தற் கடவின் யாங்கா வதுகொல் |
| பெரிதும் பேதை மன்ற |
| அளிதோ தானேஇவ் அழுங்க லூரே |
(குறுந்-276) |
| உரைத்திசின் தோழியது புரைத்தோ வன்றே |
| துருக்கங் கமழும் மென்றோள் |
| துறப்ப என்றி இறீஇயர் என்உயிரே |
(சிற்றட்டகம்) |
எனவரும். |
21) மடன்மா கூறும் இடனுமாருண்டே என்பது : அஞ்சி யச்சுறுத்தல் உலகியல்புரைத்தல் முதலியவற்றான் தோழி சேட்படுத்தியவழியும், தமர் உடன்படார் எனக் குறிப்பாற் கூறிய வழியும், இனி மறுகின் ஆர்ப்பெழ மடலேறிப் பெறுதும் எனக்கூறுதலும் உண்டு என்றவாறு. |
ஏறியமடற்றிறம் பெருந்திணைக்குரியதாகலின் அகனைந்திணைக் கண் நிகழும் பெருந்திணைப்பகுதி, கூற்றாக உரைக்கு மளவே அமையும் என்றற்கு 'மடன்மா கூறும்' என்றும் இம்மடற் கூற்றும் ஒரோவழி நிகழும் என்பது உணர இடனுமாருண்டே என்றும் கூறினார். |