38களவியல்

குன்றக் குறவன் காதன் மடமகள்

வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி

வளையள் முளைவாள் எயிற்றள்

இளைய ளாயினும் ஆரணங் கினளே

(ஐங்-256)
 

இது தோழிபண்பிற் பெயர்த்தவழித் தலைவன் கூறியது.  பிறவும் இவ்வாறே
கண்டு கொள்க.
 

2) பரிவுற்று   மெலியினும்   என்பது :  தலைவன்   இனி   ஆற்றான்
எனக்கருதிய  பாங்கன்   தலைவி    ஆடிடமறிந்து   வந்து    அவளைக்
கூட்டுவித்தற்கு  எண்ணி உள்ளம் இரங்கிய  விடத்தும் அவ்வாறே  தோழி
தலைவனது   ஆற்றாமையை   நோக்கிக்   கையுறை ஏற்றுத் தலைவியைக்
கூட்டுவிக்கக் களஞ்சுட்டுதலைக் கருதி உள்ளம் இரங்குமிடத்தும்  தலைவன்
கூற்று நிகழும் என்றவாறு.
 

இது   பாங்கற்   கூட்டத்துக்   குற்றங்காட்டிய   வாயில்  பெட்பினும்
என்பதனையும்   தோழியிற்  கூட்டத்து  மற்றைய  வழியும் என்பதனையும்
சார்ந்து நிகழும்.
 

எ - டு :

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை

குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே

இதற்கிது மாண்டது என்னாது அதற்பட்டு

ஆண்டொழிந் தன்றே மாண்தகை நெஞ்சம்

மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை

நுண்வலைப் பரதவர் மடமகள்

கண்வலைப் படூஉம் கான லானே

(குறு-184)
 

இது பாங்கன் பரிவுற்றவிடத்துத் தலைமகன் கூறியது
 

மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்

பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர்-குயில்பயிரும்

கன்னி இளஞாழற் பூம்பொழில் நோக்கிய

கண்ணின் வருந்துமென் நெஞ்சு

(திணைமா-ஐம்-49)
 

இது தோழி பரிவுற்ற இடத்துத் தலைவன் கூறியது.
 

3) அன்புற்று   நகினும்  என்பது;   பாங்கன்   தனது  கழற்றுரையான்,
தலைவன்   மனங்கலங்கிச்  சோர்வுறாமல்   தன்   அன்புரிமை  தோன்ற
நகையொடு கூறுமிடத்தும், தோழி தலைவியது  இற்செறிப்பு முதலியவற்றைக்
கூறும்வழித்     தலைவன்உளங்   கலங்காவண்ணம்   அன்பு    தோன்ற
முறுவலித்துக் கூறுமிடத்தும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு.