களவியல்39

இது   பாங்கற்   கூட்டத்து   வாயில்   பெட்பினும்   என்பதனையும்,
தோழியற்   கூட்டத்து   அறிந்தோளயிர்ப்பின்   என்பதனையும்   சார்ந்து
நிகழும்.
 

எ - டு :

அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி

அன்ன இனியோள் குணனும் இன்ன

இன்னா அரும்படர் செய்யு மாயின்

உடன் உறைவு அரிதே காமம்

குறுகல் ஒம்புமின் அறிவுடை யோரே.

(குறு.206)
 

இது பாங்கன் அன்புற்றுரைத்த விடத்துத் தலைவன் கூறியது.
 

நயனின் மையிற் பயனிது என்னாது

பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப்

பாம்புயி ரணங்கியாங்கும் ஈங்கிது

தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது

உரைமதி உடையுமென் உள்ளம் சாரல்

கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்

பச்சூன் பெய்த பகழி போலச்

சேயரி பரந்த மாயிதழ் மழைக்கண்

உறாஅ நோக்க முற்றவென்

பைதல் நெஞ்சம் உய்யு மாறே

(நற்-75)
 

இது தோழி அன்புற்று நக்கவிடத்துத் தலைவன் கூறியது.
 

4) அவட் பெற்றுமலியினும் என்பது : பாங்கன் தலைவி  இவ்விடத்தாள்
எனக் கூறி  உய்த்த  வழியும், தோழி  பகற்குறியும் இரவுக்குறியும் நேர்ந்த
வழியும், தலைவியைப் பெற்று  மகிழ்தற்கண்ணும்  தலைவன் கூற்று நிகழும்
என்றவாறு. இது மூவகைப் புணர்ச்சிக்கும் பொதுப்பட நின்றது.
 

எ - டு :

அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன

மணங்கமழ் பொழில்குறி நல்கினள் நுணங்கிழை

பொங்கரி பரந்த உண்கண்

அங்கலிழ் மேனி அசைஇய எமக்கே

(ஐங்-174)
 

காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

மாணிழை கண்ணொவ்வே மென்று

(குறள்-114)
 

எனவரும்.
 

5) ஆற்றிடையுறுதலும்   என்பது  :  பாங்கனான் இடந்தலைப்பாடுற்றுச்
செல்லுங்காலும்   இருவகைக்   குறியிடத்துச்   செல்லுங்காலும்   செல்லும்
நெறிக்கண் உறும் இடையூறு பற்றியும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு.