களவியல்41

அஃதாவது மேற்கூறிய இருபத்தொரு கிளவிகளுள் மெய்தொட்டுப்பயிறல்
முதலாக உள்ள இருநான்கு கிளவியும் இயற்கைப் புணர்ச்சிக்கும்  பெற்றவழி
மகிழ்தல் இடந்தலைப் பாட்டிற்கும் உரியவாம் எனவும்,பிரிந்தவழிக் கலங்கல்
முதல் மடன்மா கூறுதல் வரையுள்ள பன்னிரண்டு   கிளவிகளும்   பாங்கர்
கூட்டத்திற்கு உரியவாம் எனவும்  வகைப்படுத்தி  இயற்கைப் புணர்ச்சிக்கும்
இடந்தலைப்பாட்டிற்கும்   துணைக்   காரணம்   பாலதாணை    எனவும்,
மெய்தொட்டுப்   பயிறல்  முதலிய   ஏழும்  நிமித்த காரணமாம் எனவும்,
ஏனைய   இருகூட்டங்கட்கும்   பாங்கர்   துணைக்   காரணம்   எனவும்
உணர்த்தியவாறு.
 

இவற்றை   ஏழுதிணைக்கும்   உரிமைப்படுத்திப்  பின்வரும்    மூன்று
சூத்திரங்களான் கூறுவார்.
 

சூ. 106 :

முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே
(14)
 

க - து :

பாங்கர்   நிமித்தம்   பன்னிரண்டனுள்   அகனைந்திணைக்கண்
கைக்கிளை பாங்காக வருவன இவை என்கின்றது.
 

பொருள் :பாங்கர்   நிமித்தம்   பன்னிரண்டனுள்   முன்னர்  நின்ற,
பிரிந்தவழிக் கலங்கல், நிற்பவை நினைஇ நிகழ்பவை   உரைத்தல்,  குற்றங்
காட்டிய   வாயில்   பெட்புறல்   ஆகிய மூன்றும்  அகனைந்திணைக்கண்
கைக்கிளை ஒழுக்கமாக அமையும்,
 

சூ. 107 :

பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே
(15)
 

க - து :

பெருந்திணைப் பாங்காக நிகழ்வன இவை என்கின்றது.
 

பொருள் :பன்னிரு   நிமித்தங்களுள்   பின்னர்  நின்ற  "சொல்லவட்
சார்த்தலின் புல்லியவகை, அறிந்தோ ளயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும்
பீடும்   கூறுதல்,   தோழி   நீக்கலின் ஆகிய நிலைமை, மடன்மா கூறுதல்
ஆகிய   நான்கும்   அகனைந்திணைக்கண்   பெருந்திணை   ஒழுக்கமாக
அமையும்.
 

சூ. 108 :

முதலொடு புணர்ந்த யாழோர் மேன

தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே

(16)
 

க - து :

அவற்றுள்  அகனைந்திணைப் பகுதியாகச் சிறந்து வருவன இவை
என்கின்றது.
 

பொருள் :  கெடுதலில்லாத  சிறப்பினையுடைய, பெட்ட வாயில் பெற்று
இரவு வலியுறுத்தல், ஊரும் பேரும் கெடுதியும்   பிறவும்  நீரிற்  குறிப்பின்
நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும்