களவியல்43
சூ. 109 :

இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும்

காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும்

தானகம் புகாஅன் பெயர்த லின்மையின்

காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி

வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்

புகாஅக் காலை புக்கெதிர் பட்டுழிப்

பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்

வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்

தாளாண் எதிரும் பிரிவி னானும்

நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும்

வரைதல் வேண்டித் தோழி செப்பிய

புரைதீர் கிளவி புல்லிய எதிரும்

வரைவுடம் படுதலும் ஆங்கதன் புறத்துப்

புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக்

கிழவோள் மேன என்மனார் புலவர்

(17)
 

க - து :

மேல் 11, 12   ஆகிய   சூத்திரங்களான்   அதிகரித்து   நின்ற
பாங்கியிற்   கூட்டத்தின்கண் தலைமகள் கூற்று நிகழ்த்துமிடமும்
அவள் நிகழ்த்துமாறும் பற்றிய கிளவிகள் இவை என்கின்றது.
 

மற்றுக்  களவின்கண்   தலைவிமாட்டு   முறையாக நிகழும் கூற்றுக்கள்
பின்வரும் "மறைந்தவற் காண்டல்" என்னும் சூத்திரத்தாற் கூறுப.
 

பொருள்:1) இருவகைக்குறி    பிழைப்பாகிய    விடத்தும்  என்பது;
பகற்குறியும்   இரவுக்குறியும்   தலைவனை   எய்துதற்காகாமல் பிழையுற்ற
காலையும்  என்றவாறு.   குறி    பிழைத்தலாவது,   அல்ல  குறிப்படுதல்.
அஃதாவது   குறியிடத்துத்    தன்   வருகையைத் தலைவன் தலைவிக்குத்
தெரிவித்தற்கு   நிகழ்த்தும்   செயற் குறிப்புக்கள்  பிறவகையான் முன்னர்
நிகழ்ந்து விடுதலும், தலைவன் வருதற்கு   இயலாமல்   இடையூறுபடுதலும்
பிறவுமாம்.
 

செயற்குறிப்புக்களாவன :        புள்ளெழுப்புதலும்,     நீர்நிலைகளிற்
கல்லெறிந்து   ஒலியெழுப்புதலும்   சீழ்க்கை  ஒலி எழுப்புதலும் பிறவுமாம்.
இவை   பிறவாற்றான்  நிகழ்ந்த  வழி ஆண்டுத் தலைவி  வந்து பார்த்துத்
தலைவனைக் காணாது வருந்தி மீளுதல். தலைவன்  செய்யாத  குறியினைத்
தலைவன் செய்ததாக எண்ணியது குறிபிழைத்தலாயிற்று.