3) தானகம் புகாஅன் பெயர்த லின்மையின் காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் என்பது : அல்ல குறிப்பட்டு மீண்ட தலைவி தலைவன் பெருவேட்கையனாதலின் குறியிடத்திற்கு வந்தன்றி மீளான் என எண்ணி, அவன் வந்து இழைத்துச் சென்ற அடையாளங்களையேனும் காணற்கு அவாவிக் குறியிடத்திற்குச் சென்று அவற்றைக் கண்டு வேட்கையான் மயங்கிச் செயலறு பொழுதினும் என்றவாறு. |
தலைவன் இழைத்துச் செல்லும் அடையாளங்களாவன; தான் புனைந்த கண்ணி, மாலை முதலியவற்றை ஆண்டொரு கொம்பிற்கு அணிவித்துச் செல்லுதலும் விரற்செறியினைப் பூட்டிச்செல்லுதலும் பிறவுமாம். |
| எ - டு : | இக்காந்தள் மென்முகைமேல் வண்டன்றஃதிம் முகையின் |
| கைக்காந்தள் மெல்விரலாய் காணிதோ - புக்குச் |
| செறிந்ததுபோற் றோன்றும் தொடுபொறி யாம்பண் |
| டறிந்ததொன் றன்ன துடைத்து |
(நச் - மேற்) |
எனவரும். |
4) புகாஅக் காலை புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் என்பது : மனையகத்தார் உணவு கொள்ளும் வேளையில் தலைவன் விருந்தினனாய் எதிர்ப்பட்டவழித் தவிர்க்க இயலாமல் இல்லத்தார் அவனை விருந்தாக ஏற்ற பகுதிக் கண்ணும் என்றவாறு. பிற பொழுதாயின் ஓம்புதல் ஒருதலையின்மையின் புகாஅக் காலை என்றார். |
| எ - டு : | அன்னை வாழ்க பலவே தெண்ணீர் |
| இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத் |
| தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர் |
| எல்லமை விருந்தினென் என்ற |
| மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே |
(நச்-மேற்) |
எனவரும். |
5) வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் என்பது : தலைவி தான் இரவுக்குறி நேர்வாளாய்ச், செல்லும் வழியிடை உறும் ஏதங்களைக் கூறித் தங்கிச் சேறல் நலமாம் எனத் தலைவனை விருந்தாக ஏற்கும் விருப்பினைக் குறிப்பினாற் புலப்படுத்துமிடத்தும் என்றவாறு. |