களவியல்47

இப்பிரிவு முடியுடை வேந்தர்  ஏவலிற்  பிரியும்  அரசர்க்குரித்தென்பார்
நச்சினார்க்கினியர்.    அது     தலைவனது   தலைமைக்கிழுக்காமாதலின்
பொருந்தாமையறிக. எ. டு. வந்துழிக் கண்டு கொள்க.
 

7) நாணுநெஞ்  சலைப்ப   விடுத்தற்  கண்ணும்  என்பது : பெண்மைக்
குணமாகிய  நாணுடைமை  தனது   நெஞ்சினை அலைத்தலான் அதனைக்
கைவிடுதலைக் கருதிய விடத்தும் என்றவாறு.
 

அது  தோழியின் மாட்டு அறத்தொடு நிற்றற் கண்ணும்,  உடன்போக்கு
நேரும்   வழியும்   வரைவுகடாதற்   பகுதியிடத்தும்   நாணுத்    துறந்து
உரைத்தலாம்.
 

எ - டு :

அளிதோ தானே நாணே நம்மொடு

நனிநீ டுழந்தன்று மன்னே இனியே

வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை

தீம்புனல் நெறிதர வீந்துக் காங்கு

தாங்கும் அளவைத் தாங்கிக்

காமம் நெரிதரக் கைந்நில் லாவே

(குறு-149)
 

இஃது  உடன்போக்கு   நேர்ந்த  தலைவி  தோழிக்குரைத்தது. பிறவும்
சான்றோர் செய்யுளுட் கண்டு கொள்க.
 

8) வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும்
என்பது :   தலைவன்   வரைந்து   கோடலை   விரும்பி வரைவு கடாதற்
பொருட்டுத்   தோழி  தலைவனை  இயற்பழித்துச்  செப்பிய புல்லியவாகிய
கிளவியை  எதிர்மறுத்து இயற்பட  மொழியுமிடத்தும்  என்றவாறு.  புல்லிய
புரைதீர்கிளவி எனக் கூட்டுக.
 

புரைதீர்கிளவி = தலைவனது   உயர்வினைக்  குறைபடுக்கும் பழிப்புரை.
இதனை   இயற்பழித்தல்  என்ப.  எதிரும்   என்பது  எதிர்த்துக் கூறலும்
என்றவாறு.   அஃதாவது   தோழி   இயற்பழித்ததனை      ஒக்குமெனக்
கொள்ளாமல் மறுத்துரைத்தல். இதனை இயற்பட மொழிதல் என்ப.
 

எ - டு :

குறிஞ்சிக்கலி (42) வள்ளைப்பாட்டினில் தோழி,

நாணிலி எனக்கூறி,

"வரைமிசை மேல் தொடுத்த நெய்க்கண் இறாஅல்

மழைநுழை திங்கள் போல் தோன்றும் இழைநெகிழ

எவ்வம் உறீஇயினான் குன்று
 

என இயற்பழித்தவழித் தலைவி