50களவியல்

ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியும்

கரும நிகழ்ச்சி இடனென மொழிப

(செய்-193)
 

என்பதனான். இடம் என்றது கரும நிகழ்ச்சியை என்க.
 

இனி  வேட்கை  மீதூர்ந்த  வழி நாணும் மடனும்  நீங்காவோ? எனின்,
அதற்கு விளக்கம் வரும் சூத்திரத்தாற் கூறுப.
 

"வேட்கை  நெறிப்பட  வாராது" என்பதே பாடம் என்பதனை "வேட்கை
புலப்பட  நிகழாது"  என்னும்  இளம்பூரணர் உரையான் தெளிக. இங்ஙனம்
உரையை   ஊன்றி   நோக்காமல்,   இளம்பூரணர்  உரைப்பதிப்புள்  பல
இடங்களில்   பாடப்  பிழைகள்  களையப்படாமல் உள. நச்சினார்க்கினியர்
கொண்ட பாடம் "வாரா" என்பது.
 

எ - டு :

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்திற்

செம்பாகம் அன்று பெரிது.

(குறள்-1092)
 

கண்ணிறைந்த காரிகை காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

(குறள்-1272)
 

இவை போல்வன குறிப்பினான் வேட்கை புலப்படுத்துவனவாம்.
 

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்

(குறள் - 1093)
 

இவ்வாறு வருவன இடத்தினாற் புலப்படுத்துவனவாம்.
 

சூ. 111 :

காமஞ் சொல்லா நாட்ட மின்மையின்

ஏமுற இரண்டும் உளவென மொழிப

(19)
 

க - து :

மேற்கூறிய பொருள் பற்றியதோ ரையமகற்றுகின்றது.
 

பொருள் :அகத்தெழும்   வேட்கையை   உணர  உரையாத கண்கள்
காதலர்   மாட்டு    யாண்டுமின்மையான்    தலைவனது      காதன்மை
ஏமுறுதற்பொருட்டு  அவ்இரண்டும்   தலைவியிடத்து நீங்காமல் உளவாகும்
எனக்கூறுவர் புலவர்.
 

தலைவி   உரைமொழியாற் புலப்படுத்தாத வழி அவளது வேட்கையைத்
தலைவன் உணருங்கொல்? கூற்றினாற் புலப்படுத்துமாயின் நாணும்  மடனும்
வரையிறவாது   நிற்குங்கொல்?   என  ஐயம் நிகழுமன்றே? அது நோக்கி
ஆண்டுத்தலைவி கூற்று இவ்வாறு நிகழும் என்பாராய்க் "காமஞ்  சொல்லா
நாட்ட மின்மையின்" என்றார். நாணும்  மடனுமாகிய பெண்மைக் குணங்கள்
தலைவற்கு இன்பஞ் செய்யும்    என்பார். "ஏமுற இரண்டும் உள" என்றார்.
இஃது அகப்பொருள்  நூலோர்க்கு   ஒப்ப   முடிந்த கருத்தென்பார் "என
மொழிப" என்றார்.