களவியல்51

நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்.
 

என   முன்னர்ப்   பொதுப்படக்   கூறிய  "குறிப்புரை"  தலைவிக்குச்
சிறந்துரிமையாகி நிற்கும் என்பதும் 'அச்சமும் நாணும் மடனும்  முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்   குரிய என்ப'  என்றவற்றுள் நாணும் மடனும் களவுத்
தலைவிக்கு   நிலைபேறுடையவை   என்பதும்   அவை தலைவனது காதற்
கேண்மைக்கு ஏமமாகும் என்பதும் தெளியப்படும்.
 

சூ. 112 :

சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்

அல்ல கூற்றுமொழி அவள்வயி னான

(20)
 

க - து :

தலைவியது கூற்றுமொழிக் காவதொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் :களவொழுக்கத்தின்கண் தலைவன் தன்னை நோக்கிக் கூற்று
நிகழ்த்துமிடத்துத்     தலைவி     நேர்க்கூற்றாக    மறுமொழி  கூறுதல்
அருமையுடைத்தாகலின்    நேர்க்கூற்றல்லாத    மொழி    (குறிப்புமொழி)
அவளிடத்தனவாகும்.
 

எதிர்மொழிதல் - முன்னின்று   கூறுதல்.  அல்ல  கூற்றுமொழி என்றது
முன்னிலைப்புறமொழியை. எதிர்மொழிதல் இல்லை என்னாது  "அருமைத்து"
என்றமையான்   சிறுபான்மை   முன்னிலையாகக்   கூற்றுமொழி நிகழினும்
இழுக்காதென்பது கொள்ளப்படும்.
 

மேலைச் சூத்திரங்களான் எய்திநின்ற குறிப்புமொழியே யன்றி  இவ்வுழி
இவ்வாறு   சிறுபான்மை   கூற்றுமொழியும்   நிகழும் என்றமையான் இஃது
அவற்றிற்குப் புறனடையாயிற்று என்க.
 

எ - டு :

மரையா மரல்வர மாரி வறப்ப

வரையோங் கருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்

உண்ணீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்

தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்

கண்ணீர் நனைக்கும் கடுமைய காடென்றால்

என் நீர் அறியாதீர் போல இவைகூறல்

நின்நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும்

அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது 

இன்பமும் உண்டோ எமக்கு

(பாலைக்கலி-6)
 

எனவரும்.