| பேஎ நாறும் தாழ்நீர்ப் பனிச்சுனை |
| தோளார் எல்வளை தெளிர்ப்ப நின்போல் |
| யானும் ஆடிக் காண்கோ? தோழி |
| வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேல் |
| திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்க் |
| கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் கலித்த |
| ஒண்பொறி மஞ்ஞை போல்வதோர் |
| கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே |
(நச்-மேற்) |
இதன்கண் சுனையாடினேற்கு இவ்வாறாயிற்றெனத் தலைவி கரந்துகூறினமை கண்டுகொள்க. ஏனையவற்றிற்கும் தலைவிகூற்று வந்துழிக் கண்டுகொள்க. |
இக்கிளவிக்கு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் கூறும் உரையும் விளக்கமும் இந்நூல் நெறிக்கு ஒவ்வாமையை ஓர்ந்தறிக. |
24) பொய்தலையடுத்த மடலின் கண்ணும் என்பது : தலைவன் தன் குறையைத் தலைவி கொள்ளுதற் பொருட்டு மடலூர்வல் எனப் பொய்ம்மையொடு கூட்டிக் கூறுமிடத்தும் என்றவாறு. தலைவன் கூறும் மடற்கூற்றுப் பொய்யெனக் கருதினாளாயினும் அதனை விலக்கும் குறிப்பொடு தலைவி கூற்று நிகழ்த்தும் என்க. இதனை அருளியல் கிளத்தல் என்ப. |
| எ - டு : | வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே |
| அவையினும் பலவே சிறுகருங் காக்கை |
| அவையினும் அவையினும் பலவே குவிமடல் |
| ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த |
| தூக்கணங் குரீஇக் கூட்டுள சினையே |
(நச்-மேற்) |
25) கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் என்பது : தலைவியது ஆற்றாமைகண்டு செயலறவு பட்டதோழி அவள் கண்ணீரைத் துடைத்துத்துயர் மாற்ற முற்பட்ட விடத்தும் என்றவாறு. |
| எ - டு : | யாம்எம் காமந் தாங்கவும் தாம்தம் |
| கெழுதகை மையினா லழுதன தோழி |
| கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் |
| மன்ற வேங்கை மலர்ப்பதம் நோக்கி |
| ஏறா திட்ட ஏமப் பூசல் |
| விண்டோய் விடரகத் தியம்பும் |
| குன்ற நாடற் கண்டவெங் கண்ணே |
(குறு-24) |