பக்கம் எண் :

294தொல்காப்பியம் - உரைவளம்

“ஒன்றித்   தோன்றுந்   தோழி”   என்றதனால்  தோழிமார்  பலருள்ளும்  இன்றியமையாதாள்  என்று
கொள்க. 10
  

“தோழி   தானே    செவிலி  மகளே”  (களவியல்-35)  என்றதனான்.  அவள்  செவிலி  மகள்  என்று
கொள்ளப்படும்.
  

மொழிந்தது கூறி வன்புறை நெருங்குதலாவது, தலைமகன் மொழிந்தது கூறி வற்புறுத்தலாம்.
 

“அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎள்இனி
அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே”

  

எனவும்,
  

“இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீய்த்த உலவையால்
துன்புறூஉந் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறக ரால்ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே.”

  

எனவும்,
 

“கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரூஉந் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையாள் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவும் உரைத்தனரே.”
   

எனவும் அவன் மொழிந்தது கூறி, 


10 உரை கூறும்போது தோழிமேன ஒன்றித்தோன்றும் என்றார். இங்கு மாறியுள்ளார்.