பொருள்:- தலைவரும் விழும நிலையெடுத்துரைப்பினும் தலைவனுக்கும் தலைவிக்கும் பிரிவால் வரும் ஏதப்பாடுகளை எடுத்துக் கூறுதற்கண்ணும்; போக்கற்கண்ணும் தலைமகனுடன் தலைவியை அனுப்புமிடத்தும்; விடுதற்கண்ணும் - உடன்கொண்டு செல்லாமல், தலைவன் தலைவியை விட்டுப் பிரியுமிடத்தும்; நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் - தலைவி தன்னையும் தமரையும் நீத்துச் செல்லுதலால் தனக்கும் தாயர் முதலிய தமருக்கு முற்ற துன்பத்தையும்; வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித்தாய் நிலை நோக்கித் தலைபெயர்ந்துக் கொளினும் - மெய்யையும் பொய்யையும் புனைந்து கூறியும் கண்டோரைக் காட்டியும் நற்றாயின் பருவரலைக் கருதி மறுத்தரத் தலைவியை வரவேற்றுக் கொள்ளுதலினும்; நோய் மிகப் பெருகித்தன் நெஞ்சு கலுழ்ந்தோளை - தலைவன் விடுத்தகல ஆற்றாமையால் மிக நொந்து மனங் கலங்கும் தலைவியை அழிந்தது களையென - வருந்துதலை ஒழியென; மொழிந்தது; கூறி-தலைவன் கூறியதை எடுத்துக்கூறி; வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு - வற்புறுத்தி ஆற்றுவிக்கும் கூற்றுகள் நிகழ்த்தும் திறத்தொடு; என்றிவையெல்லாம்-இவை போல்வன பிற பொருந்துவனவெல்லாம்; இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழிமேன-அகத்துறை இலக்கணத்தை ஆராயின் தோழிக்குரியனவாய்ப் பொருந்தித் தோன்றும். |