பொருட்சுருக்கம்
  

தமிழ்  இலக்கணம் மூன்று  வகைப்படும்.  அவை: எழுத்து, சொல், பொருள் என்பன. பொருளில் யாப்பு
அணி  என்பனவும்  உட்படும்.  இவற்றுள்,  பொருள்,  பொதுவாக  இரண்டு  வகைப்படும்.  அவை:  அகம்,
புறம்  என்பன.  இவற்றினுள்  அகம்  களவு  என்றும்  கற்பு  என்றும்  இரண்டாகப் பாகுபடும்.  அவற்றுள்
கற்புப் பற்றிக் கூறுகின்ற இயலாகக் கற்பியல் அமைகின்றது.
  

தொல்காப்பியப்   பொருளதிகாரத்தில் கற்பியல் நான்காவது இயலாக அமைந்துள்ளது. முதலியல் அகம்
பற்றிய  பொதுச்  செய்தியையும்  இரண்டாவது   இயல்   புறம்  பற்றிய  செய்தியையும் மூன்றாவது இயல்
கரணத்திற்கு  முன்புள்ள  களவு   வாழ்க்கையைப்  பற்றியும்  அமைந்துள்ளன.   அதனைத்   தொடர்ந்த
இயலாகக்    கற்பியல்    அமைந்துள்ளது.    மேலும்    கரணத்திற்குப்    பிறகுள்ள    வாழ்க்கையைச்
சுட்டுகின்றமையால் இது களவியலுக்கு அடுத்தமைந்துள்ளது.
  

கற்பு    என்பது  குறித்து  இளம்பூரணம்  கூறுகையில்  “கற்பென்று  சொல்லப்படுவது  கரணத்தொடு
பொருந்திக் கொள்ளுதற்குரிய  மரபினையுடைய  கிழவன்  கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக்
கொடுத்தற்குரிய  மரபினையுடையார்  கொடுப்பக்  கொள்வது  (இ.  நூ.  ப.  2);  எனவே  கற்பு என்பது
கரணத்திற்குப் பிறகு தலைவனும் தலைவியும் கொள்ளுகின்ற வாழ் முறையாகும்.
  

தொல்காப்பியக் கற்பியல் ஆறு வகையான பொருண்மைகளைக் கொண்டது. அவை:
  

1. மணம் 2. கூற்று 3. ஊடல் 4. அலர் 5. பிரிவு 6. தவம் என்பன.
  

மணம்
  

கற்பு     என்பது   கரணத்தின்   அடிப்படையில்    அமைவது,    கரணம்    கொடுப்போர்க்கும்
கொள்வோர்க்குமிடையில்   நிகழும்  நிகழ்வாகும்.  இது  கொடுப்போர்  கொள்வோர்  உடன்பாட்டிலும்
நடைபெறும்.  கொடுப்பவர்  உடன்படாவிட்டால்  தலைமக்கள்  தாங்களே (உடன்போகி) கரணம் செய்து
கொள்வதுமுண்டு. (2)
  

கரணம்     பொய்யும்  வழுவும் தோன்றிய  காலத்தில்  அதனைக்  கட்டுப்படுத்த,  பெரியவர்களால்
நிகழ்த்தப்பட்ட அமைப்பாகும்.