| செய்து ... செய்யியர் = செய்து என்பது முதல் செய்யியர் என்பது ஈறாகிய ஒன்பது வாய்பாட்டால் வருவனவும் , வான்பான் பாக்கு = வான் , பான் , பாக்கு என்னும் மூன்று விகுதிகளைக் கொண்டு வருவனவும் , இன வினையெச்சம் = இவைபோல்வன பிறவும் வினைஎச்ச வினைகளாம், ஐந்து ஒன்று ஆறு = முன்னைய ஐந்தும் , நடு நின்ற ஒன்றும் , பின்னைய ஆறும் , முக்காலமும் முறைதரும் = இறந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் முறையே காட்டுவனவாம். இவற்றுள் செய்து, செய்தென என்னும் இரண்டும் இடைநிலையாலும் ஒழிந்தன இறுதிநிலையாலும் காலம் காட்டும் என உணர்க. வான் பான் பாக்கு என்பன அவ்வவ் எச்ச விகுதிகளை உடைய மொழிகளை உணர்த்திநின்ற குறிப்புச் சொல். இன என்றமையால், ஆடிக் கொண்டான், போய்க் கொண்டான் எனச் செய்து என் வாய்பாடு பற்றி இகர விகுமியும் யகரமெய் விகுதியும் வரும் எனவும், தழீஇக் கொண்டான் என விகுதி விகாரப்பட்டு வரும் எனவும், புக்கு வந்தான் எனப் பகுதி விகாரப்பட்டு வருமெனவும், உணற்கு வந்தான் எனச் செயவென் வாய்பாடு பற்றிக் குவ்விகுதி வருமெனவும், உண்டாற் பசிதீரும், உண்டக்காற் பசிதீரும், உண்டக்கடைப் பசிதீரும், உண்டவழிப் பசிதீரும், உண்டவிடத்துப் பசிதீரும், உண்ணுமேற் பசிதீரும் எனச் செயி என் வாய்பாடு பற்றி ஆல், கால், கடை, வழி, இடத்து, ஏல் விகுதிகள் வரும் எனவும், எள்ளுமேனும் வரும், காண்டலும் இதுவே கூறும் என ஏனும் உம்மும் ஒரோவிடத்து விகுதிகளாய் வருமெனவும், உண்ணாமே வந்தான், உண்ணாமை வந்தான், உண்ணாமைக்கு வந்தான், உண்ணாமல் வந்தான் என எதிர்மறை இடத்து, மே , மை , மைக்கு , மல் விகுதிகள் வரும் எனவும், அருள் இன்றி வந்தான், அறமல்லாதில்லை. அறமல்லாமேயில்லை, அறமல்லாமையில்லை, அறமல்லாமலில்லை, நீயல்லாலில்லை என வினையெச்சக் குறிப்புக்களுக்கு, றி, து, மே ,மை மல், ஆல் என்பவை விகுதிகளாம் எனவும் கொள்க. உரையிற்கோடல் என்னும் உத்தியினாலே, செயவென் எச்சம் நிகழ்காலம் அன்றி மற்றைக்காலமும் தரும் எனக் கொள்க . அது, தனக்குரிய நிகழ்காலத்தின்கண் இது நிகழாநிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருட்டாயும், இறந்த காலத்தில் காரணப் பொருட்டாயும், எதிர்காலத்திற் காரியப் பொருட்டாயும் வரும் . காரணப்பொருட்டாய் வருதலாவது முடிக்கும் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினை எச்சத்தால் உணரப்படும் தொழில் காரணம் என்பது பட வருதல். காரியப்பொருட்டாய் வருவதலாவது , முடிக்கும் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும் தொழில் காரியம் என்பது பட வருதல் . சூரியனுதிக்க வந்தான்..................நிகழ். மழை பெய்ய நெல் விளைந்தது.........இற. நெல் விளைய மழை பெய்தது.........எதிர்.
இன்னும், உரையிற்கோடல் என்னும் உத்தியால், வான், பான், பாக்கு என்னும் மூன்றும் சிறுபான்மை தொழிற் பெயர் விகுதிகளாயும் வரும் எனக் கொள்க. நீ வருவானேன், யானுரைப்பானேன், "ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி - னேதம் படுபாக் கறிந்து" என வரும். இங்கே, வருவான், உரைப்பான் படுபாக்கு என்பன. முறையே, வருதல், உரைத்தல், படுதல் எனப் பொருள்படுதல் காண்க. 24
|