102

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
உரிச்சொல் மெல்லெழுத்து மிக்கது. மழகளிறு, உறுகாலொற்ற (நற். 300) என உரிச்சொல்
இயல்பாயின. அளிகுலம் (திருச்சிற். 123), வயிரகடகம், தூமகண்ணன், கனகசாதி,
கமலபாதம், தனதடம் என வடசொல் இயல்பாயின. இல்முன் முன்றில், படைமுன்
முன்படை, கண்மீ மீகண், பொதுவில் பொதியில், வேட்கைநீர் வேணீர் (கலி. 23),
வேட்கை அவா வேணவா (மணி. பதி. 18), பின் பின்றை என்றற் றொடக்கத்துப்
போலிமொழிகளும், அருமருந்தன்னான் அருமந்தான், கிழங்கன்ன பழஞ்சோறு கிழங்கம்
பழஞ்சோறு, குணக்குள்ளது குணாது, தெற்குள்ளது தெனாது, குடபாலது குடாது,
வடக்கண்ணது வடாது, சோழனாடு சோணாடு, பாண்டியனாடு பாண்டிநாடு,
மலையமானாடு மலாடு, தஞ்சாவூர் தஞ்சை, பனையூர் பனைசை, 5சேந்தமங்கலம்
சேந்தை, ஆற்றூர் ஆறை, ஆதன்றந்தை ஆந்தை, பூதன்றந்தை பூந்தை, வடுகன்றந்தை
வடுகந்தை என்றற்றொடக்கத்து மரூஉமொழிகளும், 6நிலைமொழி வருமொழிகளில்
ஏற்குஞ்செய்கையறிந்து முடிக்க.

     இவற்றுள், அருமந்தான் முதலானவற்றை வலித்தல் முதலான விகாரங்களான்
அமைக்கவென்பாரும், ஆந்தைமுதலானவற்றை இலக்கண மொழிகளாக 7வேறெடுத்து
முடிப்பாரும் உளர்.

     (பி - ம்.) 1மரூஉவும் 2எவ்வகை 3கற்றோர் 4மான்கன்று 5 (1) சேந்தைமங்கலம்
சேந்தை; (2) செந்தமிழ்மங்கலம் செந்தை 6வருமொழி நிலைமொழிகளில் 7என்றெடுத்து
முடிப்பாரும்.

(36)

நான்காவது மெய்யீற்றுப் புணரியல் முற்றிற்று.
 

ஐந்தாவது
 

உருபுபுணரியல்.
 

(239)

ஒருவ னொருத்திபல ரொன்று பலவென
வருபெய ரைந்தொடு பெயர்முத லிருநான்
குருபு முறழ்தர நாற்பதா முருபே.

     இவ்வோத்து என்னுதலியதோவெனின் ஓத்துநுதலியதூஉம் ஓத்தினது
பெயர்உரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்னபெயர்த்தோ வெனின்,
உருபுகள் பதத்தொடுபுணருமாறு உணர்த்திற்றாகலான் 1உருபு புணரியலென்னும்
பெயர்த்து. மேலோத்தினோடு 2இதற்கு இயைபென்னையோவெனின், மேல்
பதத்தொடுபதம் புணருமாறு உணர்த்தினார்; ஈண்டு அப்பதத்தொடு உருபுபுணருமாறு
உணர்த்தலின் மேலோத்தினோடு இயைபுடைத்தென்க. 3இவ்வோத்தினுள்
இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வேற்றுமையுருபுகள் ஆமிடமும்
அவற்றதுதொகையும் உணர்த்துதல் நுதலிற்று.