எ - ன், ஆகுபெயராமாறுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பொருளே இடனே காலமே சினையே 2குணனே தொழிலே நால்வகைஅளவையே சொல்லே 3தானியே கருவியே காரியமே கருத்தனே யென்னும் இவைமுதலானவற்றுள் ஒன்றன் பெயரானே அதற்கு இயைபுடைய பிறி4தொன்றினை வரலாற்று முறைமையோடும்சொல்லுவன ஆகுபெயர்களாம் எ - று.
எனவே, 5ஆக்கவாகும்பெயர் ஆகுபெயரென்பதாயிற்று; ஆகவே இயற்பெயரும் ஆகுபெயருமென எல்லாப்பெயரும் இருகூற்றவா மென்ப தூஉமாயிற்று.
வ - று. புளி, கடு, தெங்கு, தாமரை, ஆம்பலென்பன, அம்முதற் பொருள்களையுணர்த்தின் இயற்பெயராம்; புளித்தின்றான், கடுத்தின்றான், தெங்குதின்றான், “தாமரை புரையுங் காமர் சேவடி” (குறுந். கடவுள்), “ஆம்ப னாறுந் தேம்பொதி 6துவர்வாய்” (குறுந். 300) என அவற்றின் சினைகளையுணர்த்தின், ஆகுபெயராம்.
குழிப்பாடி, சீனமென்பன, அவ்விடமுணர்த்தின் இயற்பெயராம்; இப்படாம் குழிப்பாடி, இப்பட்டுச் சீனமென அவ்விடத்திற் பொருளுணர்த்தின் ஆகுபெயராம்.
கார், கூதிர், கார்த்திகை, சித்திரையென்பன அக்காலமுணர்த்தின் இயற்பெயராம்; காரறுத்தது, கூதிர்வீசும், கார்த்திகைப்பூப்ப, சித்திரையாடுமென அக்காலத்துப்பயிரினையும், காற்றினையும், காந்தளாகுந்தோன்றியையும், ஆறாடலையுமுணர்த்தின் ஆகுபெயராம்.
கொழுந்து, இலை, பூ, வேரென்பன, அவ்வுறுப்பையுணர்த்தின் இயற்பெயராம்; அவற்றின் முதலையுணர்த்தின் ஆகுபெயராம்.
நீலம், வட்டமென்பன, அப்பண்பையுணர்த்தின் இயற்பெயராம்; 7 “நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள்” (இ. வி. சூ. 192, உரை), இச்செறு வட்டமென அப்பண்பியையுணர்த்தின் ஆகுபெயராம்.
ஊண், எழுத்து, செய், பாட்டு என்பன அத்தொழிலையுணர்த்தின் இயற்பெயராம்; ஊண்கொடுத்தார், “எழுத்தறியத் தீரு மிழிதகைமை” (குறள். 392, பரி. மேற்), “பெருஞ்செய் நெல்லின்” (புறநா. 395), “பாட்டின் பொருளைப் 8பரவிப் பலகால்”, என அத்தொழிற்பொருள்களையுணர்த்தின் ஆகுபெயராம்.
ஒன்று, துலாம், நாழி, உழக்கு, ஆழாக்கு, கோலென்பன, அளவைகளையுணர்த்தின் இயற்பெயராம்; இப்பணம்ஒன்று, இப்பொன் துலாம், இப்பால்நாழி, இந்நெய் உழக்கு, இவ்வெண்ணெய் ஆழாக்கு, இம்மனை ஒருகோலென அவ்வளவைப்பொருள்களையுணர்த்தின் ஆகுபெயராம்.
எழுத்துச் சொற் பொருள் யாப்பணியென்பன, அச்சொல்லப்பட்ட பொருள்களையுணர்த்தின் இயற்பெயராம்; இவ்வதிகாரம் எழுத்து, இவ்வதிகாரம் சொல், இவ்வதிகாரம் பொருள், இவ்வதிகாரம் யாப்பு, இவ்வதிகாரம் அணியென அவற்றைச்சொல்லும் அதிகாரங்களையுணர்த்தின் ஆகுபெயராம். | |
|
|