2. - வினையியல்

163

   
 

(320)

பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள்
வினைமுதன் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே.

     எ - ன், வினைச்சொலென்பது வினையும் வினைக்குறிப்புமென இரண்டு;
அவற்றுள், வினையாவது உணர்த்தினார், இது வினைக்குறிப்பாவது உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலென்னுமாறும்
இடமாகத்தோன்றி மேற் கருத்தாமுதலாகச்சொன்ன ஆறனுட் கருத்தா ஒருவனையுமே
காட்டிநிற்றல், வினைக்குறிப்பிற்கு இயல்பாவது எ - று.

     வினையைக்குறிப்பாக உடைமையின், வினைக்குறிப்பு.

     வ - று. குழையினன், குழையினள், குழையினர், குழையிற்று, குழையின;
குழையினேன், குழையினேம்; குழையினை, குழையினீர் எ - ம், அகத்தினன்,
அகத்தினள், அகத்தினர், 1அகத்தது, அகத்தன; அகத்தினேன், அகத்தினேம்;
அகத்தினை, அகத்தினீர் எ - ம், நாளினன், நாளினள், நாளினர், நாளிற்று, நாளின;
நாளினேன், நாளினேம்; நாளினை, நாளினீர் எ - ம், கண்ணினன், கண்ணினள்,
கண்ணினர், கண்ணிற்று, கண்ணின; கண்ணினேன், கண்ணினேம்; கண்ணினை,
கண்ணினீர் எ - ம், கரியன், கரியள், கரியர், கரியது, கரியன; கரியேன், கரியேம்;
கரியை, கரியீர் எ - ம், செலவினன், செலவினள், செலவினர், செலவிற்று, செலவின;
செலவினேன், செலவினேம்; செலவினை, செலவினீர் எ - ம் முறையே காண்க.

     (பி - ம்.) 1 அகத்திற்று

(2)

 

(321)

அவைதாம்,
முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி
ஒன்றற் குரியவும் பொதுவு மாகும்.

     எ - ன், மேற்சொன்ன வினை வினைக்குறிப்புகட்கு எய்தியதோர் விதி
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) மேல் வினையும் வினைக்குறிப்புமென்று சொல்லப்பட்ட இரண்டும்,
முற்றென்றும் பெயரெச்சமென்றும் வினையெச்சமென்றுமாகி, ஒருதிணைக்கே உரியவும்
1இருதிணைக்குமுரியவும் ஒருபாற்கே உரியவும் பலபாற்குரியவும் ஓரிடத்திற்கேயுரியவும்
பலவிடத்திற்குரியவுமாம் எ - று.

     உதாரணம் தத்தம் சிறப்புவிதிச்சூத்திரங்களுட்காண்க.

     (பி - ம்.) 1 பலதிணைக்கும்

(3)

 

(322)

பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரல தேற்பில முற்றே.