| | (359) | பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை எதிர்மறை யிசையெனுஞ் 1சொல்லொழி பொன்பதும் குறிப்புந் தத்த மெச்சங் கொள்ளும். | எ - ன், எச்சங்களின் வகையும் முடிபும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) சொல்லெச்சமும் குறிப்பெச்சமுமென எச்சம் இரண்டாம்; அவற்றுட் பெயர்முதலாக இசையீறாகச் சொல்லப்பட்ட சொல்லெச்சமொன்பதாம்; குறிப்பெச்சமொன்றாம்; இப் பத்தெச்சமும் தத்தம் எச்சங்களைக் கொண்டு முடியும் எ-று.
இன்னதற்கு இன்னது எச்சமென்று மொழிந்திலாதார் தத்தமெச்ச மென்று குறித்துரைத்தவாறு என்னையோ வெனின், அஃதே! நன்று சொன்னாய்; அவற்றைப் பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாகக்கொள்ளத் தாமே விளங்குதலின், அவ்வாறே சொன்னா ரென்க. அஃதாவது, பெயராகிய எச்சத்தையுடையது யாது அது பெய ரெச்சமென்பது. பிறவுமன்ன.
பெயரெச்சமும் வினையெச்சமும் மேலே சொல்லப்பட்டன; ஏனைய இடையியலிற் 2சொல்லப்படும்; ஈண்டு அவற்றையே வேறெடுத்தோதுவது என்னையோவெனின், அக்குறியான் ஒத்தனவேனும் இலக்கணத்தான் வேறுபாடுடையன வென்க. அவ்வேறுபாடு அவ்வவற்றிற்குக்காட்டும் இலக்கியங்களுட்காண்க.
வ - று. “இணரெரி தோய்வன்ன வின்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று” (குறள். 308), “எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும், கண்ணென்ப வாழு முயிர்க்கு” (குறள். 392), “யாதெனின் யாதனி னீங்கியா னோதல், அதனி னதனி னிலன்” (குறள். 341) எனவரும் இவை முறையானே பிறர் இன்னாசெயினும் தான் வெகுளாமை நன்றெனவும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப உலகத்துவாழும் உயிர்க்கெல்லாம் கண்ணென்ப கற்றாரெனவும், யாதனின் யாதனின் நீங்கியான் ஒருவன் நோதல் அதனின் அதனின் இலனெனவும் இவ்வாறு எஞ்சிய பெயர் கொண்டு முடிதலிற் பெயரெச்சமாயின.
“காலங் கருதி யிருப்பர் கலங்காது, ஞாலங் கருது பவர்” (குறள். 485), “வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின், ஈண்டுயற் பால பல” (குறள். 342), “நுண்மா ணுழைபுல மில்லா னெழினல, மண்மாண் புனைபாவையற்று” (குறள். 407) எனவரும் இவை முறையானே கொள்ளுங்காலம் குறித்துக் கலங்காதிருப்பர் ஞாலங்கருதுபவரெனவும், உய்யவேண்டிற் காலமுண்டாகத்துறக்க, துறந்தபின் இப்பிறப்பில் உய்யற்பாலன பலவெனவும் நுண்ணறிவில்லாதான் எழில் நலம் மண்புனை மாண்பாவை எழில் நலம் எற்று அற்றெனவும் வினையும் வினையுளடங்கும் வினைக்குறிப்புங் கொண்டு முடிதலின், வினையெச்சமாயின. அஃதேல், “எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றும், கள்ளாமை காக்கதன் னெஞ்சு.” | |
|
|