192

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (பி - ம்.) 1முதலாவிடை 2 “ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின், மெய்யுருபு
தொகாஅ விறுதியான” என்பது தொல்காப்பியம். இந்தவிதி கொண்டு இறுதி
வேற்றுமையுருபு தொகாதென்றறிக.

(12)

 

(363)

காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை.

     எ - ன், வினைத்தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) காலங்கள் தோன்றாது தன்னெச்சமான பெயர்கொண்டு
நிற்கும்பெயரெச்சம் வினைத்தொகையாம் எ - று.

     வ - று. பொருகளிறு, பொருவேல், பொருகளம், பொருபகை, பொருபொழுது,
பொருபோரெனவரும்.

     இவற்றுள், காலமாவது முக்காலத்தையும் தோற்றுவிக்கும் இடைநிலைகள்; அவை
ஆகுபெயராய்நின்றன. இவை விரிவுழி பொருதகளிறு, பொராநின்றகளிறு,
பொருங்களிறெனவிரியும்; பிறவுமன்ன.

(13)

 

(364)

பண்பை விளக்கு மொழிதொக் கனவும்
ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை.

     எ - ன், பண்புத்தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பொருளின்கட் கிடந்த குணத்தைக்காட்டுதற்கு ஆண்டு வருமொழி
தொக்கனவும், ஒருபொருட்கு உரிய இருபெயர் ஒருங்குவந்தவும் பண்புத்தொகையாம்
எ - று.

     வருமொழி, ஐகாரமுதலியன.

     வ - று. கருஞ்சாத்தன், தண்ணீர், நறுமலர், தீம்பால், குறுங்கொற் றன்;
வட்டக்கடல், உள்பொருள், இல்குணம் எ - ம், “கேழற்பன்றி” (புறநா. 152),
“வேழக்கரும்பு”, அளகைநகர், ஆனித்திங்கள், “அகர முதல்” (குறள். 1), “சகரக்கிளவி”
(தொல். மொழி. 29) எ - ம் வரும். இவை விரிவுழி, கருஞ்சாத்தனென்பது,
கரியசாத்தனென இருதிணையைம்பாற்கும் பொதுவாகிய பெயரெச்சக்குறிப்பு
வாய்பாட்டான் விரியும். இவ்வாறன்றிக் கரியதெனின், அஃறிணையொருமைக்கேயுரிய
முற்றாய்த் தொகாநிலையாமென்க. இனி, பண்பாவது, பொருட்குணமாதலின்,
அப்பொருட்கு உரிமைதோன்றக் கருமையையுடைய சாத்தனென்பாருமுளர். அவையும்
அறிந்துகொள்க. இனி, ஏனையவற்றை விரிக்குமிடத்து, தண்ணிய நீர், நறியமலர்,
தீவியபால், குறியகொற்றன்; வட்டமாயகடல், உள்ளபொருள், இல்லாக் குணம் எ - ம்,
கேழலான பன்றி, வேழமான கரும்பு, அளகையானநகர், ஆனியானதிங்கள்,
அகரமானமுதல், சகரமானகிளவி எ - ம் விரியும். கேழற்பன்றிமுதலானவும்
சாதிதொக்கபண்புடைமையின், ஈண்டுவேண்டினாரென்க. ஒத்த பண்புபற்றி
ஒற்றுமைகுறித்துவரும் கைத்தாமரை, கண்வேல், புருவச்சிலை என்றித்தொடக்கத்தனவும்
ஈண்டே கொள்க.

     பண்புக்குத்தொக்குநின்றது கருமையென்ற ஐகாரம்.