| 202 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (375) | ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும் மெய்தெரி பொருண்மே லன்மையும் விளம்புப. | எ - ன், திணைபால் ஐயுற்றவழியும் துணிந்தவழியும் இவ்வாறே சொல்லுகவெனத் திணைபால் வழுக்காத்தல் நுதலிற்று.
(இ - ள்.) திணைமேல் ஐயந்தோன்றியவழி அவ்விருதிணைக்கும் பொதுவினானும், பால்மேல் ஐயந்தோன்றியவழி அவ்வப்பால்களுக்குப் பொதுவினானும், இன்னதென்று உண்மைதெரிந்த பொருளின்மேல் அல்லாத தன்மையைவைத்தும் சொல்லுவர் ஆசிரியர் எ - று.
வ - று. தெற்றெனவுணர்தலாகாத இடமானும் காலமானும்பற்றி நான்குமுழ அளவின் ஓருருவுகண்டு, குற்றிகொல்லோ? மகன்கொல்லோ? என்று, ஐயுற்றவழிக் குற்றிகொல்லோ மகன்கொல்லோ தோன்றுவதென்றலுமாகாது, தோன்றுவானென்றலுமாகாது; அவ்விருதிணைக்கும் ஏற்ப இஃதோ தோன்றுகின்ற உருவென்க; அஃதேல், உருவென்பது பொதுச் சொல்லாயினன்றே அவ்வாறமைவதெனின், மகனுருவுகொல்லோவென்னும் குறிப்பினனாய்ச் சொல்லுதலின் அமையுமென்க.
உயர்திணையுள், பெண்மகள் கொல்லோ? ஆண்மகன்கொல்லோ? எனப் பாலையம்தோன்றியவழி, இஃதோ தோன்றுவானெனலும் ஆகாது, தோன்றுவாளெனலும் ஆகாது; அவ்விருபாற்கும் பொதுவாகத் தோன்றுவாரென்க.
இனி, அஃறிணைக்கண் செய்யகத்துப் பல அடிச்சுவடுகண்டால் ஒன்றே பல அடிச்சுவடுபடவுந்திரியும்; பலவும் பலவடிச்சுவடுபடவுந் திரியுமாகலின், ஒன்றுகொல்லோ? பலகொல்லோ? என்று ஐயுற்றவழி, ஒன்றுகொல்லோ பலகொல்லோ இச்செய்புக்கதெனலுமாகாது, புக்கனவெனலுமாகாது; அவ்விருபாற்கும் ஏற்ப ஒன்று கொல்லோ பலகொல்லோ இச்செய்புக்க பெற்றமென்க.
இனித் துணிவுதோன்றியவழி, குற்றிகொல்லோ? மகன்கொல்லோ? என நின்ற திணையையத்துக்கண் மகனாதல் துணிந்தாற் குற்றியல்லன் மகனென்க; குற்றியாதல் துணிந்தால் மகனன்று குற்றியென்க.
இனிப் பாலையத்துப் பெண்மகளாதல் துணிந்தானேல், ஆண்மகனல்லள் பெண்மகளென்க; ஆண்மகனாதல் துணிந்தானேற் பெண்மகளல்லன், ஆண்மகனென்க.
இனி, அஃறிணைக்கண் ஒன்றாதல் துணிந்தானேல், பலவன்று ஒன்றென்க; பலவாதல் துணிந்தானேல், ஒன்றல்ல பலவென்க. அஃதேற் குற்றியல்லன் மகனென்றவழி, அல்லனென்னும் உயர்திணை வினைக்குறிப்பு முற்று மகனென்னும் பெயர்கொண்டு முடியக் குற்றியென்னும் பெயர்க்கு ஒரு பயனிலையின்மையின் அது நின்றுவற்றுமெனின், நீக்கப்பொருண்மைக்கண் வரும் ஐந்தனுருபு குற்றியினல்லனென விரிய நின்று வற்றாதா மென்க. அல்லனவற்றிற்கும் இவ்வாறே கொள்க. | (25) | |
|
|