208

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
காலமென்று வேற்றுணர்வும் பிறவும் படுவதில்லையென்ப. இனி, காலம் ஒன்றென்பார்,
யாறொழுகும், மலைநிற்குமென உள்பொருள் ஒரு காலத் தானே சொல்லப்படும்,
பிறிதில்லையென்ப. இறப்பும் எதிர்வுமென இரண்டென்பார், கோலோடுங் காற்
சென்றதூஉம் செல்வதூஉமன்றே? அதனால், நிகழ்வில்லையென்ப. மூன்றென்பார்,
நெருநல், இன்று, நாளை எ - ம், வந்தான், வாராநின்றான், வருவான் எ - ம் இவ்வாறு
சொற்கள் மூன்று காலமும் காட்டுதலின் மூன்றென்ப. இவ்விகற்பமெல்லாம் அறிவித்தற்கு
இவ்வாறு சூத்திரஞ்செய்தாரெனக்கொள்க.

     ஏகாரத்தான் மூன்றென்பதே ஈண்டுப் பொருளெனக்கொள்க.

      “உலக வழக்கமு மொருமுக் காலமு, நிலைபெற வுணர்தரு முது 2மறை
நெறியான்” என்றார், அகத்தியனார்.

     (பி - ம்.) 1 (1) எதிர்நிகழ்பென, (2) எதிர்புநிகழ்பென 2 முறை

(31)

 

(382)

முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே.

     எ - ன், காலவழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) முக்காலத்தினும் ஒருதன்மையவாய் நிகழும்பொருள்களை
நிகழ்காலச்சொல்லானே சொல்லுவர், தொல்லாசிரியர் எ - று.

     வ - று. யாறொழுகும், மலைநிற்கும், நிலம் கிடக்கும், 1நீர்குளிரும், 2தீச்சுடும்,
வளியுளரும் எனவரும். பண்டும், இன்றும், மேலுமென முக்காலப் பொதுவாக்குக.
பிறவுமன்ன.

     (பி - ம்.) 1 நீர்தண்ணிது 2 தீய்வெய்து

(32)

 

(383)

விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும்
பிறழவும் பெறூஉ முக்காலமு மேற்புழி.

     இதுவுமது.

     (இ - ள்.) இந்நான்கு பொருண்மைக்கண்ணும் முக்காலமும் தம்முள்
மயங்கிவரவும்பெறும், ஏற்குமிடத்து எ - று.

     உம்மையான், மயக்கம் ஒருதலையன்றென்க.

     வ - று. விரைவு : சோறுவேவாநிற்க அதை உண்டு போதற் பொருட்டாக
இருந்தானொருவனைப் புறத்துநின்றானொருவன் தாம் இருவரும் போக
வேண்டுங்குறையுடைமையால், இன்னும் உண்டிலையோ? போதுகவென்றால்,
உண்டேனுண்டேன், போந்தேன், போந்தேனென்னும்; உண்ணாநின்றானைச்சொல்லினும்,
உண்டேனுண்டேன், போந்தேன் போந்தேனென்னும். இவை விரவு.

     மிகுதி : அறஞ்செய்தான் சுவர்க்கம்புக்கான், சுவர்க்கம்புகும்; தாயைக்கொன்றான்
நிரயம்புக்கான், நிரயம்புகுமென்னுமிவை உலகின் மிக்கவாதலின், (இப்பயன்கள்
தப்பாமையின்) மிகுதிக்கண்வந்தன.