இக்கூறுபாடுகள் தத்தம் இலக்கணச் 2 சூத்திரத்துள்ளே கண்டுகொள்க. எனவே சார்பெழுத்தெனத் தொகையான் ஒன்றும், வகையாற் பத்தும், விரியான் முந்நூற்றறுபத்தொன்பதுமாம் சார்பெழுத்து எ - று. எனவே இச்சூத்திரங்களாற் போந்த பொருள் எழுத்தெனத் தொகையான் ஒன்றும், 3 முதலெழுத்துச் சார்பெழுத்தென வகையான் இரண்டும், இவ்விரண்டன் விரியும்கூட்ட விரியான் முந்நூற்றுத் தொண்ணூற்றொன்பதூஉமாம் எழுத்தென்பதாயிற்று. இன்னும் இவற்றைக் குற்றுயிர், நெட்டுயிர், உயிர்மெய்க்குறில், உயிர்மெய் நெடில், வல்லினம், மெல்லினம், இடையினமென்பவற்றானும் பிறவற்றானும் பகுப்ப எனைத்தும் பலவாம். அவையும் வேண்டுமேல் அவ்வாறு விரித்துரைத்துக்கொள்க. அகரமெனத் தொகையானொன்றும், உயிர்அகரமும் உயிர்மெய் அகரமுமென வகையானிரண்டும், உயிர் அகரமொன்றும், உயிர்மெய் அகரம் பதினெட்டுமென விரியாற் பத்தொன்பதுமாம். அகரமொழிந்தனவும் இவ்வாறேகொள்க. இனி, தொகை வகைவிரியைத் தொகைவகைவிரியானுறழ்ந்து ஒன்பதாக்கி 4உரைப்பாருமுளர். இவர் ஈண்டை வழக்கிற்கு வேண்டுமாறே கொண்டாரென்க. தாமே தமித்து நிற்கையின் 5 முதலெழுத்தென்றாயின. அவையே தம்மொடு தாம் சார்ந்தும் இடஞ்சார்ந்தும் இடமும் பற்றுக்கோடும் சார்ந்தும் விகாரத்தால்வருதலிற் 6 சார்பெழுத்தென்றாயினவெனக்கொள்க. எண் முற்றும். (பி - ம்.) 1 சார்பெழுத்தினது 2 சூத்திரங்களுள்ளே 3 முதலெழுத்தும் சார்பெழுத்துமென 4 உரைப்ப 5 முதலாயின 6 சார்பாயின | பெயர்களின் பொதுவிலக்கணம் | | (61) | இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின. | எ - ன், நிறுத்தமுறையானே பெயராமாறு உணர்த்துவானெடுத்துக் 1 கொண்டார், அவற்றுள், இத்தலைச்சூத்திரம் பெயர்க்கெல்லாம் பொது வாயதோரிலக்கணமுணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) இடுகுறியானும் காரணத்தினானுமாகும் பெயர்கள், பொதுவைப்பற்றியும் சிறப்பைப்பற்றியும் வருவனவாம் எ - று. இஃது என்னை 2 சொன்னவாறெனின், இடுகுறிப் பொதுப்பெயரும், இடுகுறிச்சிறப்புப்பெயரும் காரணப் பொதுப்பெயரும், காரணச் சிறப்புப்பெயருமென யாவகைப்பெயரும் நால்வகைப் படுவனவாம் எ - று. எனவே, உலகத்துப்பெயர்களெல்லாம் இவ்விருதிறத்தானுமன்றி வாராமை 3 வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் யாண்டும் ஆராய்ந்துகொள்க. ஆவி, உயிர், மெய், உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர். அவற்றுள், அ, ஆ; க, ங என்றற்றொடக்கத்தன இடுகுறிச்சிறப்புப்பெயர். குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினமென்றற் றொடக்கத்தன காரணப் பொதுப்பெயர். 4 குற்றிகரம், குற்றுகரம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கமென்றற் றொடக்கத்தன காரணச் சிறப்புப்பெயர். இவ்வாறே பிறவும் ஆராய்ந்தறிக. | | | |
|
|