210

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
    இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி
நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப.

     எ - ன், செப்பு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வெட்டினுள்ளும் முதன்மூன்றும் செவ்வன் இறையாம்;
ஏவல்முதலைந்தும் செப்பின் பொருண்மையாய் வருதலின் அவற்றையும்
செப்பெனக்கொள்வர் புலவர் எ - று.

     வ - று. அறிவானொருவனை ஒருவன் ‘இச்சொற்குப் பொருள் யாது? மதுரைக்கு
வழி யாது?’ என்றவழி, இஃதென்பது சுட்டு. சாத்தா உண்ணாயோ? என்றால்,
உண்ணேனென்பது மறை; உண்பேனென்பது நேர்தல்; நீ உண் என்பது ஏவல்;
உண்ணேனோ? என்பது வினாவெதிர் வினாதல்; வயிறுகுத்திற்றென்பது உற்றது
உரைத்தல்; வயிறுகுத்து மென்பது உறுவதுகூறல். ‘மணியுளவோ? பயறுளவோ?’
என்றால், வயிரமுள உழுந்துளவென்பது இனஞ்செப்பல்.

     இனி, ‘நிலவிய’ என்றமிகையானே, வினாவின்றியும் செப்பு வருவனவுமுள வென்க;
அறிவானொருவன், இன்னநாட் காற்றடிக்கும்; இன்னநாள் மழைபெய்யும்; இன்னநாள்
வாழ்வுவருமென்பனவும், ஆறுசெல்வானொருவன், ‘கங்கையாடிப்போந்தேன், ஒருபிடி
சோறு தம்மின்; ஓராடை தம்மின்’ என்பனவுமாம் பிறவுமன்ன. இவற்றின்வழு
மேலேகாட்டினாம்.

(35)

 

(386)

வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல்.

     எ - ன், இவ்விரண்டும் வழுவற்கவென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) வினாவிடத்தும் எதிர்மொழி செப்புமிடத்தும் சினையும் முதலும் தம்முள்
மயங்கப்பெறா எ - று.

     வ - று. சாத்தனல்லனோ? கொற்றனல்லனோ? என வினாயவிடத்துச் சாத்தனிற்
கொற்றனல்லன்; கொற்றனிற் சாத்தனல்லனென்க. சாத்தன் மயிர் நல்லவோ? கொற்றன்
மயிர் நல்லவோ? என வினாயவழி, சாத்தன் மயிரிற் கொற்றன்மயிர் நல்ல; கொற்றன்
மயிரிற் சாத்தன்மயிர் நல்லவென்க. பிறவுமன்ன.

(36)

 

(387)

எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதன் மரபே.

     எ - ன், மரபாவது இன்னதென்று அதனிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) யாதொருபொருளை யாதொருசொல்லான் யாதொரு படியானே
முன்னாட் கற்றுவல்லோர்கள் சொன்னார்கள்? அதனை அப்படியே சொல்லுதல்
மரபாவது எ - று.

     அஃதாவது பொருளாதி யாறனுள்ளும் ஒன்றைப் பலசொல்லானும், பலவற்றை
ஒருசொல்லானும் வழங்குதலாம்; அவற்றுட்சிலவருமாறு: