214

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(391)

ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி
ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி.
     இதுவுமது.

     (இ - ள்.) ஒரு பொருளின்மேற் பலபெயர்கள் அடுக்கி வரின், அவற்றிற்கெல்லாம்
ஈற்றிலே ஒருவினையைக் கொடுப்பர்; அவையன்றிச் சிறுபான்மை பெயர்தோறும்
ஒருவினையைக் கொடுத்தும் வழங்குவர் பெரியோர் எ - று.

     வ - று. ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன்வந்தான்,
பாண்டியன்பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வந்தானென்றாற் பெயர்களனைத்தும்
அவர்மேல் நிற்கும்; இனி, ஆசிரியன்வந்தான், பேரூர்கிழான்வந்தான்,
செயிற்றியன்வந்தான், இளங்கண்ணன்வந்தான், சாத்தன் வந்தானென்றால், அனைத்தும்
அவன் மேற் செல்லாவாம்; இனி, ஒரோவழி: “எந்தை வருகவெம் பெருமான் வருக,
மைந்தன் வருக மதலை வருக” எ - ம், “மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதக,
இன்றேன் கமழ்தா ரியக்கன் புகுதக, வென்றோன் புகுதக வீரன் புகுதக, என்றே நகர
மெதிர்கொண் டதுவே” (சீவக. 2122) எ - ம் பெயர்தோறும் ஒருவினைவந்தன.

     இனி, எந்தைவருக; எம்பெருமான் போக; மைந்தன்நிற்க; மதலை யிருக்க என்றால்
ஒருவினையன்மையின் ஏலாவென்க. பிறவுமன்ன. ஒரோ வழி - சிறுபான்மை.

(41)

 

(392)

திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ
டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே.

     இதுவுமது.

     (இ - ள்.) திணைப்பெயர்முதலான இப்பெயர்களுடனே 1இயற்பெயர் அடுத்துச்
சொல்லுங்கால், அவ்வியற்பெயரை ஏனைப்பெயர்களுக்குப் பின்னே சொல்லுதல்
சிறப்புடைத்து எ - று. “இயன்று வரும் பெயரியற்பெய ராகும்.”

     வ - று. குன்றவன்குறவன், அருவாளனழகன், பார்ப்பான் பாராயணன், சேரமான்
சேரலாதன், ஊர்கிழானோணன், மெய்யன் மேற்றிசை நின்றான், நாடகிநம்பி, ஆசிரியன்
அமிழ்தன், ஏனாதி ஏறனெனக்காண்க.

     ‘பின்வருக’ என்று விதியாது, ‘பின்வரல்சிறப்பு’ என்றதனால், சிறுபான்மை,
வெண்கொற்றப் படைத்தலைவன், வெள்ளேறக்காவிதியென வரப்பெறுமாயினும் அவை
சிறப்பிலவெனக்கொள்க.

     பசுநங்கை வந்தது, எருதேறன்வந்ததென அஃறிணைக்குங் கொள்க.

     (பி - ம்.) 1இயற்பெயரெடுத்துச் சொல்லுங்கால்.

(42)