3. - பொதுவியல்

215

   
 

(393)

படர்க்கைமுப் பெயரோ டணையிற் சுட்டுப்
பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும்
மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி.
     இதுவுமது.

     (இ - ள்.) படர்க்கையிடத்தவான உயர்திணை அஃறிணை விரவுத் திணைப்
பெயர்களுடனே சுட்டுப்பெயர் வினைக்கண்வருமாயின், அஃது அவற்றின்பின்னேவரும்;
பெயர்க்கண்ணாயிற் பின்னும் முன்னும் வரும் வழக்கினுள்; செய்யுட்கண்ணோ வெனின்,
இன்னவிடத்தென்னும் நியதியின்றி அப்பெயர்களுடனே வேண்டியவிடத்து வரப்பெறும்
எ - று.

     வ - று. வழக்கு : நம்பிவந்தான், அவற்குச் சோறுகொடுக்க; எருது வந்தது,
அதற்குப் புல்லிடுக; சாத்தன்வந்தான், அவற்குச் சோறுகொடுக்க; சாத்தன்வந்தது,
அதற்கப் புல்லிடுகவென வினைக்கட்சுட்டுப்பெயர் பின்னே வந்தது; சாத்தனவன், அவன்
சாத்தனெனப் பெயர்க்கண் அஃது ஈரிடத்தும்வந்தது. அவன் வந்தான், நம்பிக்குச்
சோறுகொடுக்க என்றற்றொடக்கத்தன ஆகாவென்க.

     இனி, செய்யுள் : “அவனணங்கு நோய்செய்தா னாயிழாய் வேலன்,
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந், தன்னை யலர்கடப்பந் தாரணியி
லென்னைகொல், பின்னை யதன்கண் விழைவு.” சேந்தன் இயற்பெயர். பிறவுமன்ன.

(43)

 

(394)

அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்.

     எ - ன், மரபு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அசைநிலைக்கண்ணும், விரைவு வெகுளி உவகை அச்சம் அவலமுதலிய
பொருணிலைக்கண்ணும், இசைநிறைத்தற் பொருட்டும் ஒருசொல் இரண்டும் மூன்றும்
நான்கும் எல்லையாக அடுக்கிவரப்பெறும் எ - று.

     அசைநிலைக்கு இரண்டு அடுக்கும் : பொருள்நிலைக்கு இரண்டும் மூன்றும்
அடுக்கும்; இசைநிறைக்கு இரண்டும் மூன்றும் நான்கும் அடுக்கும்.

     வ - று. ஒக்கும் ஒக்கும், மற்றோமற்றோ, அன்றேஅன்றே என்பன அசைநிலை.
கள்ளர்கள்ளர், பாம்புபாம்பு; தீத்தீத்தீ, போபோபோ என்பன விரைவு. எய்எய்;
எறிஎறிஎறி என்பன வெகுளி. வருகவருக; பொலிகபொலிகபொலிக (திவ்ய). என்பன
உவகை. படைபடை; எங்கே எங்கே எங்கே என்பன அச்சம். உய்யேன்உய்யேன்;
வாழேன் வாழேன் வாழேன், மயிலே மயிலே மயிலே, மடவாய், மடவாய், மடவாய்;
“புயலே ரொலிகூந்த லினியா யினியாய், குயிலேர் கிளவிநீ யுரையா யுரையாய்,
அயில்வே லடுகண் ணழகீஇ யழகீஇ”, “ஐயாவென் னையாவென் னையா
வகன்றனையே” (சீவக. 1802) என்பன அவலம்; இவை பொருணிலை