236

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(431)

மன்னே யசைநிலை யொழியிசை யாக்கம்
கழிவு மிகுதி நிலைபே றாகும்.

     எ - ன், மன்னென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வாறு பொருட்கண்ணும் வரும், மன்னென்னு மிடைச்சொல் எ - று.

     வ - று. “மாலை யென்மனார் மயங்கி யோரே” (குறுந். 234; கலி. 119.) இஃது
அசைநிலைக்கண் வந்தது. “பண்டு கூரியதோர் வாண்மன்.” இப்போது
கோடிற்றென்றானும், வாய் போயிற்றென்றானும், 1இளநீர்த்ததாயிற் றென்றானும்
ஒருசொல்லொழியவந்தமையின், இஃது ஒழியிசை. “பண்டு காடுமன்” என்பது
இப்பொழுது கயல்பிறழும் வயலாயிற்றென ஆக்கப் பொருட்கண் வந்தது. “சிறியகட்
பெறினே யெமக்கீயு மன்னே” (புறநா. 235) எ - து அஃது இப்பொழுது கழிந்ததெனக்
கழிவின்கண்வந்தது. “மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி” (சிலப். 7
: 3.) இது மிகுதிக்கண்வந்தது. “மன்னா வுலகத்து மன்னியது புரைமே” (கலி. 54),
“பூமன்னும் பொழில்” எ - து நிலைபேற்றின்கண்வந்தது.

     (பி - ம்.) 1 (1) இந்நீர்த்தாய்த்தென்றானும்;(2) இன்னீர்த்தாயிற்றென்றானும்

(13)

 

(432)

வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே.

     எ - ன், மற்றென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இம்மூன்று பொருட்கண்ணும் வரும் மற்றென்னு மிடைச் சொல் எ - று.

     வ - று. “மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது” (நாலடி. 19.) இது
வினைமாற்று. “மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்” (சீவக. 1873.) இஃது
அசைநிலை. “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான்முந் துறும்” (குறள்.
380.) இது பிறிதென்பதன் மேல் வந்தது.

(14)

 

(433)

மற்றைய தென்பது சுட்டிய தற்கினம்.

     எ - ன், மற்றையதென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மற்றையதென்னு மிடைச்சொல் சுட்டியதனையொழிய, அதற்கு இனமான
பிறிதொன்றினைக் காட்டும் எ - று.

     வ - று. பலபொத்தகங் 1கிடந்துழி, ஒருவன் ஏவுவான் ஏவலாளனை,
‘பொத்தகங்கொடுவா’ என்றால், அவன் ஒரு பொத்தகங்கொடு வந்தவிடத்துத்
தான்கருதியது அன்றெனின், அவன், ‘மற்றையது கொணா’ என்னும்; என்றால்,
கொணர்ந்ததன் இனமாயதனை அச்சொற் சுட்டிற்றாகலான், கொணர்ந்ததனையொழித்து
அதற்கினமான பொத்தகம் கொணருமென்பது.

     (பி - ம்.) 1 கிடப்புழி

(15)