4. - இடைச்சொல்லியல்

237

   
 

(434)

கொல்லே யைய மசைநிலைக் கூற்றே.

    எ - ன், கொல்லென்னுமிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) கொல்லென்னுமிடைச்சொல் ஒருபொருட்கண் ஐயப்பாடும்
அசைநிலையுமான கூறுபாட்டதாம் எ - று.

     வ - று. குற்றிகொல்லோ? மகன் கொல்லோ என்பது ஐயம்.
1பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர், வருவர்கொல் வயங்கிழாஅய்
வலிப்பல்யான் 2கேஎளினி” (கலி. 11) என்பது அசைநிலை.

     (பி - ம்.) 1 பிரிவெள்ளி 2 கேளினி

(16)

 

(435)

ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே.

     எ - ன், இவ்விரண்டிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுத லிற்று.

     (இ - ள்.) இவ்விரண்டிடைச்சொல்லும் இசைநிறைத்தற்கண் வரும் எ - று.

     வ - று. “முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர், விதைக்குறு வட்டி போதொடு
பொதுள” (குறுந். 155) எ - ம், “சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்த்தே” எ - ம்
வரும்.

(17)

 

(436)

அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே.

     எ - ன், இவ்விரண்டிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுத லிற்று.

     (இ - ள்.) இவ்விரண்டிடைச்சொல்லும் அசைநிலையாயும் இடப் பொருளவாயும்
வரும் எ - று.

     வ - று. “அந்திற் கச்சினன் கழலினன்” (அகநா. 76) எ - து அசைநிலை;
“வருமோ சேயிழை யந்திற் கொழுநற் காணிய” (குறுந். 293) எ - து அவ்விடத்தென
இடப்பொருட்டாய் வந்தவாறு. “ஆங்கத், திறனல்ல யாங்கழற யாரை நகுமிம்,
மகனல்லான் பெற்ற மகன்” (கலி. 86) எ - து அசைநிலை; “ஆங்காங் காயினு மாகக்
காண்டக” (முருகு. 250, பி. ம்.) என்பது இடம்.

(18)

 

(437)

அம்ம வுரையசை கேண்மினென் றாகும்.

     எ - ன், அம்மவென்னுமிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அம்மவென்னுமிடைச்சொல், உரையசையாயும் கேண்மி
னென்னுமுன்னிலை ஏவற்பொருட்கண்ணதாயும் வரும் எ - று.

     வ - று. “செயனின்ற பண்ணினுட் செவிச்சுவைக் கொள்ளாமை, நயனின்ற
பொருள்கெடப் புரியறு நரம்பினும், பயனின்று மன்றம்ம காமம்” (கலி. 142) என்பது
உரையசை. “அம்ம வாழி தோழி” (நற். 158; குறுந். 104; ஐங்குறு. 31 - 40) என்பது
கேளாயென்னும் பொருட்கண் வந்தது.

(19)