1. - எழுத்தியல்

33

   
     எ - ன், குற்றியலுகரத்தோற்றம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) நெட்டெழுத்தின்பின்னும், ஆய்தமே உயிரே வல்லெழுத்தே
மெல்லெழுத்தே இடையெழுத்தே என்றிவைதொடர்ந்த மொழியீற்றிலுநின்ற
கசடதபறக்களை 1ஊர்ந்துவந்தஉகரம் தன்மாத்திரையிற் சுருங்கிவரும். நெடில்முதலான
இவ்வாறன்மேலும் ஒன்றும்பலவும் பிறவெழுத்துத் தொடரவும்பெறும் எ - று.

     ஈரொற்றுத் தொடர்ந்தமொழிகள் வன்றொடரும் மென்றொடருமாய்
அடங்குமெனக்கொள்க.

     வ - று. நாகு, எஃகு, வரகு, கொக்கு, குரங்கு, 2தொள்கு, எ - ம்; ஆகாது,
பிண்ணாக்கு, சுண்ணாம்பு, இருபஃது, ஆமணக்கு, 3ஆர்க்கு, வாழ்த்து, மொய்ம்பு
எனவும் வரும். பிறவுமன்ன. “நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை, ஒற்றொடு
வருதலொடு குற்றொற் றிறுதியென், றேழ்குற் றுகரக் கிடனென மொழிப” என்னும்
இவ்வேழிடத்துவருமென் பனவும் இவற்றுள்ளே யடங்குமென்ப. இவ்வாறு
ஏழிடங்கொள்வார்க்குச் சுண்ணாம்பு, ஆமணக்கு, பிண்ணாக்குமுதலானவும்
ஆய்தந்தொடர்ந்தனவும் அடங்காவென்றறிக. ‘நெடிலோடு’ எனப் பிரித்தோதினார்,
மூவெழுத்துக் கூடிய தொடர்மொழி அன்மையின்.

     (பி - ம்.) 1ஊர்ந்த 2தெள்கு 3அரக்கு, ஈர்க்கு

(39)

ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும்

 

(94)

தற்சுட் டளபொழி யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும்.
     எ - ன், ஐகார ஒளகாரக்குறுக்கங்களாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) தன்னைச்சொல்லுதற்கண்ணும் அளபெடுத்தற்கண்ணுமல்லாதவழி வந்த
ஐகாரம் மொழிமுதல் இடை கடையென்னும் மூன்றிடத்தும் குறுகும். இவ்வாறுவரும்
ஒளகாரமும் மொழிமுதற்கண் அவ்வாறாம் எ - று.

     வ - று. ஐப்பசி, மைப்புறம்; மடையன், உடைவாள்; குவளை, தவளை, தினை,
பனை எ - ம், மௌவல் எ - ம் வரும். “கல்லென் கௌவை”, “ஒல்லென் பௌவம்”
என்பன இடையே குறைந்தவை யென்பாருமுளர். அவை கௌவை, பௌவமென
முதலிலே குறைந்த மொழிகள் நிலைமொழிகளோடு புணர்ந்தன வென மறுக்க. அந்தௌ,
அத்தௌ என்பன கடையிலேகுறைந்தனவெனின், அவை ஒரு பொருட் சிறப்புடையவாய்
நடப்பனவல்லவென மறுக்க.

(40)

மகரக்குறுக்கம்

 

(95)

ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்.
எ - ன், மகரக்குறுக்கமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.