இரண்டாவது பதவியல் | | (127) | எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற் பதமா மதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப. | என்பது சூத்திரம். இவ்வோத்து என்னுதலியதோவெனின், ஓத்துநுதலியதும், ஓத்தினதுபெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்னபெயர்த்தோவெனின், பதங்களினது இயல்பு உணர்த்திற்றாதலாற் பதவியலென்னும் பெயர்த்து. மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோவெனின், மேல் எழுத்திலக்கணம் பன்னிருபகுதியான் உணர்த்தப்படுமென்றவற்றுள் எழுத்திற்கேயுரிய பத்திலக்கணமும் போனவோத்தினானுணர்த்தி, அவற்றின் பின்னின்றது அவ்வெழுத்தினானாகிய பதமாகலின், அதனை ஈண்டுணர்த்துதலின், இயைபுடைத்தென்க. இவ்வோத்தினுள் இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பொதுவகையாற் பதமாமாறும் அதன் பகுதியும் உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) மேற்சொன்ன எழுத்துத்தானே தனியே நின்றும் தொடர்ந்து நின்றும் பொருளை விளக்குமேயெனின் அது பதமென்பதாம்; அது பகாப்பதமும் பகுபதமுமென இருபகுதியாய் நடக்குமென்று சொல்லுவர் புலவர் எ - று.
எனவே எல்லாமொழியும் ஓரெழுத்துப்பதம் தொடரெழுத்துப்பதமெனவும் பகாப்பதம் பகுபதமெனவும் இவ்விரண்டாய் அடங்குமென்பதாம். இறிஞி, மிறிஞி முதலாயின தொடர்ந்தனவேனும் பொருள்தாராவாகலிற் பதமாகாவென்பதாயிற்று. பதமெனினும் மொழியெனினும் சொல்லெனினும் ஒக்கும். “தன்னை யுணர்த்தி னெழுத்தாம் பிறபொருளைச், சுட்டுதற் கண்ணேயாஞ் சொல்” என்பது அவிநயப்புறநடை | (1) | | (128) | உயிர்மவி லாறுந் தபநவி லைந்தும் கவசவி னாலும் யவ்வி லொன்றும் ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின. | எ - ன், மேல் எழுத்துத் தனியே நின்றும் பதமாமென்றார், அவை இவையென்பதூஉம் இத்துணையவென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) உயிரிலும் மகரத்திலும் அவ்வாறும், தவ்விலும் பவ்விலும் நவ்விலும் ஐவைந்தும், கவ்விலும் வவ்விலும் சவ்விலும் நந்நான்கும், யவ்வில் ஒன்றும் ஆகு நெட்டெழுத்தும், நொவ்வும் துவ்வுமாம் குற்றெழுத்திரண்டுமாக ஓரெழுத்தொருமொழி நாற்பத்திரண்டும் சிறப்புளவாம் எ - று. | |
|
|