86

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   

(199)

பூப்பெயர் முன்னின 1மென்மையுந் தோன்றும்.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதனுதலிற்று.

     (இ - ள்.) பூவென்பதன்முன் வல்லெழுத்துமிகலேயன்றி வருவதன் இனமான
மெல்லெழுத்துவரவும்பெறும் எ - று.

     வ - று. பூங்கொடி; 2சோலை, தாமம், பந்து என வரும்.

     உம்மையாற் பூக்கொடிமுதலானவும் கொள்க.

     (பி - ம்.) 1மென்மையும்புணரும். 2சாலை

 (50)

(200)

இடைச்சொ லேயோ முன்வரி னியல்பே.

     எ - ன், எய்தியதுவிலக்குதல் நுதலிற்று.

     (இ - ள்.) இடைச் 1சொல்லாய்வரும் ஆறு ஏகாரமும் எட்டு ஓகாரமுமான
இவற்றின்முன்வரும் வல்லினம் இயல்பாம் எ - று.

     வ - று. அவனேகொண்டானென்பது பிரிநிலை; நீயேகொண்டா யென்பது வினா;
காலே கையே செவியே தலையே என்பது எண்; “கழியே, 2சிறுகருநெய்தல்...........3பாடோவாதே’ (அகநா. 350) என்பது ஈற்றசை;
அவனேகொண்டானென்பது தேற்றம்; “ஏஎதனையென்றோரிருடிவினவ” என்பது
இசைநிறை. கொளலோகொண்டானென்பது ஒழியிசை; அவனோ அல்லனோ
சொன்னானென்பது வினா; ஓஒ பெரியனென்பது சிறப்பு; யானோ கொண்டேனென்பது
எதிர்மறை; நன்றோ தீதோவன்றென்பது தெரிநிலை; அவனோபோனானென்பது கழிவு;
“காணிய வம்மினோ கங்குலது நிலையே” என்பது அசைநிலை;
அவனோகொண்டானென்பது பிரிநிலை; இயல்பாயினவாறு காண்க.

     (பி - ம்.) 1 சொல்லென 2 (1) சிறுநெய்தல் (2) கருநெய்தல் 3பாடொவ்வாதே

(51)

 

(201)

வேற்றுமை யாயி னைகா னிறுமொழி
ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) வேற்றுமையிடத்து ஐகாரவீற்றுச்சொற்களுள், பொது விதியான்வரும்
வல்லெழுத்துப்பேறேயன்றி ஐகாரங்கெட்டு அம்முப்பெற்று முடிவனவும் சிலஉளவாம்
எ-று.

     வ - று. ஆவிரங்கோடு, வழுதுணங்காய், 1தூதுளங்காய், தில்லங்காய்,
பாவட்டங்காய், (ஆவிரை, வழுதுணை, தூதுளை, தில்லை, பாவட்டை) + (2செதிள்,
தோல், பூ) எ - ம், ஓலம்போழ் எ - ம் வரும்.

     ‘ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே’ 3என்றதனான் ஈற்றழிவின்றியே
அம்மேற்பவும் உளவெனக்கொள்க: அவை, அரையங்காய், 4பனையங்கோல் எனவரும்.
‘ஏற்பவும்’ என்றது, பொதுவிதி வல்லெழுத்துவிலக்காமற் கோடற்கெனக்கொள்க.

     (பி - ம்.) 1தூதுணங்காய் 2செதுள் 3என்பதனால் 4மனையங்கோல்

(52)