பதிப்புரை | ஏற்பட்டிருந்த இடைவெளி தெற்றெனப் புலப்பட்டது. அகப்பொருள், புறப்பொருள், யாப்பு, அணி போன்ற இலக்கணக் கூறுபாடுகளுக்குத் தனித்தனி இலக்கணங்கள் தோன்றின. அதன் விளைவாகப் பேரிலக்கணத்தின் பயன் குறையலாயிற்று. அதோடு இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், தண்டியலங்காரம் போன்ற சிற்றிலக்கணங்களின் செல்வாக்கு வளர்ந்தது. இங்கே இன்னொரு கருத்தையும் நாம் கருத வேண்டும். இலக்கணப் பகுதிகள் எல்லாவற்றையும் ஒருங்கே விளக்கும் பெருநூல்களைக் கற்பதில் தொய்வுணர்வு தோன்றுவது இயல்பு. அந்த உணர்வை மாற்றி, வேண்டிய இலக்கணப் பகுதியை வேண்டியோர் வேண்டியவாறு கற்பதற்கு ஏற்பச் சுருக்கநூல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் யாப்பருங்கலக் காரிகை, நேமிநாதம் போன்ற நூல்கள் தோன்றலாயின. சுருங்கச் சொன்னால் பெருமரபின் செல்வாக்கு குறைந்தது; சிறுமரபின் செல்வாக்கு கூடியது. அதன் விளைவாகச் சங்கப் பாடல்களே இலக்கியம்; தொல்காப்பியமே இலக்கணம் என்ற கருத்து ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வாக்கில் மாறத் தொடங்கியது. இவ்வாறு இலக்கிய மரபு, இலக்கண மரபு, உரைமரபு ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி ஒரு புதிய மொழிச்சூழலைத் தோற்றுவித்தது. புத்திலக்கணம் ஒன்று உருவாகக் காலம் கனிந்துவிட்டது என்பதை அது புலமை உலகுக்கு அறிவித்தது. இந்த மொழிச்சூழலையும் கால முதிர்ச்சியையும் பவணந்தி முனிவர் உணர்ந்தார்; செயல்பட்டார்; நன்னூல் தோன்றிவிட்டது. ஆகவே இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல், பழையன கழிதல், புதியன புகுதல் என்னும் தொடர்களில் நன்னூல் என்னும் புத்திலக்கணம் தோன்றிய வரலாறே அடங்கியுள்ளது என்று கருதத் தோன்றுகிறது. | பவணந்தி முனிவர் | பெயருக்கு ஏற்ப நன்னூல் ஒரு நல்ல இலக்கணம். அதனைத் தமிழுக்கு வழங்கிய பவணந்தி முனிவரைப், “பல்கலைக் குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான்” (நன். 137) என்று சங்கர நமச்சிவாயர் நாவாரப் புகழ்வார். பவணந்தி முனிவர் சமணத் தமிழ்மரபில் வந்தவர்; வடமொழி அறிந்தவர். அதனால் அம்மரபைத் தழுவித் தமது இலக்கண நூலில் அவர் பதவியலை அமைத்தார் என்பது அனைவர்க்கும் உடன்பாடு. சங்கர நமச்சிவாயர், “இப்பதவியலுக்கு மேற்கோள் ஆரியம் என்பார் மொழி என்னாது, ‘பதம்’ என்றும் கூறினார்.” (நன். 128) என்றும், “வடநூல் மேற்கோளாக ஒருமொழிகளை விதந்து, பகாப்பதம், பகுபதம் எனக் காரணக்குறி தாமே தந்து, அவற்றை நல்விருந்தென்ன நாவலர் பயில, “எழுத்தே தனித்தும்” என்னும் | |
|
|