பக்கம் எண் : 108
  

பதிப்புரை
 

என்றமையின் இயல்பிற்கு நகரம் ஒழிந்த எட்டு மெய்யும் வருவித்துக் காண்க.

     உ-ம்: 2. நூ. 338.

     இங்ஙனம் கூறினார், “வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே” (நூ. 257) என
அல்லீற்று வியங்கோளும் உடன்பட்டுப் புணர்த்தமையான் எடுத்து ஓதாப் பிற ஈற்றவாய்
இருதிணை ஐம்பால் மூவிடங்களினும் வாழ்த்து முதலிய ஏவற்பொருளவாய்ச் சென்றன
உளவேல் அவை, “புதியன புகுதலும், வழுவல” (நூ. 462) என்னும் வழுவமைதியாய்
வந்த வியங்கோள் என்பதூஉம் பெற்றாம்.

     குறிப்பு எட்டு:

     நூற்பெயர்க் குறுக்கம் எதுவும் இல்லாமல், அடைப்புக்குறிக்குள் உள்ள எண்கள்
நன்னூல் நூற்பாக்களைக் குறிக்கும்.

     உ-ம்: 1. நூ. 49.

     எ-னின், மேற் கூறிய (47, 48) பதினொன்றனுள் நூற்பெயர்க்குச் சிறப்புவிதி
உணர்த்துதல் நுதலிற்று.

     உ-ம்: 2. நூ. 61.

     இவை இத்துணைய ஆதல் (89-97) பிறப்பதிகாரத்தினுள் (74-97) காண்க. இவ்வாறு
உயிர்மெய் ஒழிந்தனவற்றையும் விரித்தல் தொன்னெறி என்பார், ‘என்ப’ என்றார்.
 

குறிப்பு ஒன்பது:


     இலக்கிய இலக்கண மேற்கோள்களுக்கு நல்ல பதிப்புகளைப் பின்பற்றி
வழக்கம்போலத் தொடர் எண்களும் அடி எண்களும் தரப்பட்டுள்ளன.

     தொல்காப்பியத்துக்கு மர்ரே பதிப்பைப் (1960) பின்பற்றி இயலின் பெயரும் நூற்பா
எண்ணும் (தொல். மரபு. 98) தரப்பட்டுள்ளன. உரை மேற்கோள்களுக்கு அந்தந்த
உரையின் எண்முறை (தொல். தொகை. 4 நச்) பின்பற்றப்பட்டுள்ளது.

     தொல்காப்பியச் சூத்திர விருத்திக்குத் தண்டபாணி தேசிகர் பதிப்பையும் (1968)
இலக்கண விளக்கச் சூறாவளிக்கு ஆறுமுக நாவலர் பதிப்பையும் (1956) பின்பற்றிப் பக்க
எண்கள் (தொல். விரு. பக். 12-14), (இல. சூறா. பக். 100) கொடுக்கப்பட்டுள்ளன.