பக்கம் எண் : 116
  

நன்னூல் விருத்தியுரை
 

     <ஈண்டு13 கேட்பிப்போர் இயற்றமிழ் வல்ல ஆசிரியர். படலம் நுதலியது
இவ்வதிகாரம் என் நுதலிற்றோ எனின் என்பது. ஓத்து நுதலியது இவ்வோத்து
என் நுதலிற்றோ எனின் என்பது. சூத்திரம் நுதலியது இச்சூத்திரம் என்
நுதலிற்றோ எனின் என்பது. படலத்திற்கு இயைபு மேலை அதிகாரத்தோடு
இயைபு உடைத்தாயிற்று என்பது. ஓத்திற்கு இயைபு மேலை ஓத்தினோடு இயைபு
உடைத்தாயிற்று என்பது. சூத்திரத்திற்கு இயைபு மேலைச் சூத்திரத்தோடு இயைபு
உடைத்தாயிற்று என்பது. இவை நூன்முகத்துக் காட்டப்படுதலே அன்றிப்
படலமுகத்தும் ஓத்துமுகத்தும் சூத்திரமுகத்தும் காட்டப்படும். இவை எல்லாம்
பாயிரமேயாம். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க.


     அற்றேல் கேட்போர் மாணாக்கரும் கேட்பிப்போர் ஆசிரியரும் ஆகலான்
இவ்விரண்டும் பொதுப் பாயிரத்தால் பெறப்படுமாலோ எனின் அற்று அன்று.
பொதுவகையான் ஆசிரியர்க்கும் மாணாக்கர்க்கும் இலக்கணம்
பெறப்பட்டனவல்லது இந்நூற்கு இன்னார் என்னும் சிறப்புவகை ஆண்டுப்
பெறப்படாமையின் இஃது ஈண்டுக் காட்டப்படும். இது காட்டாக்கால் சிற்றறிவோர்
பெருநூலும் பேரறிவோர் சிறுநூலும் முத்தமிழுள் ஒரு நூற்கு உரியார் ஏனை
இரண்டு நூலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனுள் ஒன்றற்கு
உரியார் ஏனை மூன்று நூலும் கேட்பான் புக்கு, இடர்ப்பட்டு மயங்குப. ஆகலின்
இஃது ஒருதலையான் காட்டல் வேண்டும் என்பது. இதுபற்றி அன்றே பொது
எனவும் சிறப்பு எனவும் பாயிரம் இரு பகுதிப்பட்டதூஉம் என்க.


     இக்கருத்து அறியாத உரையாசிரியரை உள்ளிட்டோர் எல்லாரும்14 நூல்
அரங்கேறும் அவைக்களத்துக் கேட்டாரைக் கேட்போர் என்றும் தொகுத்தல்
முதலிய வழியின் வகையினை யாப்பு என்றும் கூறினார். ஆக்கியோன் பெயர்,
நுதலிய பொருள் என்பனபோல இறந்தகாலத்தால் கூறாது, “கேட்போர்”
(நூ. 47)
என எதிர்காலத்தால் கூறியதே அஃது உரை அன்மைக்குச் சான்றாம் ஆகலானும்
காலம் களத்துள் அடங்குதலின் வேறு கூற வேண்டாமையானும் ஆக்கியோன்
பெயர் முதலியனபோல நூல் வழங்கும் காலத்து நிகழ்வது அன்று ஆகலின்

--------------------------
     13தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 27-29).
     14எல்லாரும் என்பது களவியல் உரையாசிரியர் (இறை. 1), இளம்பூரணர்,
நச்சினார்க்கினியர் (தொல். சிற. பாயி.), மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர்
(நன். சிற. பாயி.), வைத்தியநாத தேசிகர் (இல. விள. சிற. பாயி.) முதலியோரைக்
குறிக்கலாம்.
     இவர்களுள் சங்கர நமச்சிவாயர், “கேட்போர்” என்பதற்குச் சீயகங்கன்
என்று பொருள் கூறுவார்.