பக்கம் எண் : 118
  

உரைப் பாயிரம்
 

(விருத்தம்)
 

  நன்னூலுட் கருத்துலகோ ரறியவுரை
     செய்கவென நரேந்திர சிங்கம்
தென்னூற்று மலைமருதப் பன்புகலப்
     பொருள்விளங்கச் செய்தான் பாரில்
எந்நூற்கு மெழுத்தொடுசொற் பொருளறிசங்
     கரநமச்சி வாய னென்னும்
பன்னூற்செந் தமிழ்ப்புலவன் சைவசிகா
     மணிநெல்லைப் பதியி னானே.

அகத்தியந்தொல் காப்பியமே முதலியமுன்
     னூல்கள்பல வாய்ந்து முப்பால்
பகுத்ததிரு வள்ளுவரே முதன்ஞான
     நூல்களெலாம் பகல்செய் வான்போல்
இகத்திலுரை செயவலசங் கரநமச்சி
     வாயனெனு மியற்பேர்பெற்ற
தகைப்புலவ னன்னூலுக் குரைவகுத்த
     தொருவியப்போ தமிழ்வல் லோரே.

முன்னூற்கு மலயமுனி தன்னூற்கும்
     புவியிடத்து முதியோ ராற்சொல்
எந்நூற்குந் தமிழ்க்கடலு ளினியியற்று
     நூற்கும்வகை யிதனாற் காட்டி
நன்னூற்கு விரித்துரைசெய் தான்றிகாந்
     தத்தளவு நடத்துங் கீர்த்தித்
தென்னூற்று மலைமருதப் பன்சொலச்சங்
     கரநமச்சி வாயன் றானே.

     இம்மூன்றும் உரைப் பாயிரம்.