பக்கம் எண் : 119
  

பொதுப் பாயிரம்
 

பாயிரத்தின் காரணப்பெயர்கள்
 

1.

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.

     எ-னின், பாயிரத்திற்கு வரூஉம் காரணக்குறிகள் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: பாயிரத்தின் இலக்கணங்களை முன் உணர்ந்தல்லது, நூல்களைச் செய்தலும்
அவற்றை ஈதலும் ஏற்றலும் முடியாமை கருதி முன் உரைத்தலின் முகவுரை என்றும்,

     “பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
     தொகுதி யாகச் சொல்லுத றானே” (வி. மே.)

என்ப ஆகலின் மேல் வகுக்கும் ஐந்து பொதுவும் (3) பதினொரு சிறப்பும் ஆகிய (47,
48) பல்வகைப் பொருளையும் தொகுத்துச் சொல்லுதலின் பதிகம் என்றும் நூலினது
பெருமை முதலிய விளங்க அணிந்துரைத்தலின் அணிந்துரை என்றும் முகவுரை
என்றதுபோல நூன்முகம் என்றும் நூல் நுதலிய பொருள் அல்லனவற்றை உரைத்தலின்
புறவுரை என்றும் நூற்கு உள்ள, நுதலிய பொருள் அல்லனவற்றை அதற்குத்
தந்துரைத்தலின் தந்துரை என்றும் அணிந்துரை என்றாற்போலப் புனைந்துரை என்றும்
பாயிரத்துக்குப் பெயராம் என்றவாறு.

     பாயிரம் என்பது வரலாறு. பாயிரம் கூறப் புகுந்தார் நிகண்டு்போல அதன் பெயர்
விகற்பங்களைக் கூறியது என்னை எனின் இப்பாயிரம் பதிகமாகிய புறவுரையாய்த்
தந்துரைக்கப்படுவதேனும் நூற்கு இன்றியமையாத அணியாய் முன் உரைக்கப்படுவது
என்பது இக்காரணக்குறிகளான் விளங்குதலின் என்க. (1)
 

பாயிரத்தின் வகை
 

2.

பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே.
 
     எ-னின், மேற், “பாயிரம்” (நூ. 1) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: மேற் பாயிரம் என்றது பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் என
இருவகையினை உடைத்து எ-று. (2)
 

பொதுப் பாயிரத்தின் இலக்கணம்
 

{3}

நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும்
எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம்.