பக்கம் எண் : 120
  

நன்னூல் விருத்தியுரை
 

     எ-னின், இருவகைப் பாயிரத்துள் பொதுப் பாயிரத்தை விரித்து
உணர்த்துதல்நுதலிற்று.

     இ-ள்: நூலினது வரலாறும் ஆசிரியனது வரலாறும் அவ்வாசிரியன் நூலை
மாணாக்கற்குச் சொல்லுதலின் வரலாறும் மாணாக்கனது வரலாறும் அவன் கேட்டலின்
வரலாறும் என்னும் ஐந்தும் எல்லா நூற்கும் ஆம் ஆதலின் இவ்வைந்து வரலாற்றையும்
விளங்க உணர்த்துவது பொதுப் பாயிரமாம் எ-று.

     திறன்-கூற்று. என்றது வரலாற்றை ஆதலின் அதனை ஏனைய வற்றுள்ளும் பிரித்து
உரைத்தாம். ‘ஆம்’ என்பதனை எல்லா நூற்கும் ஆம் எனக் கூட்டுக.

     “ஈவோன் றன்மை யீத லியற்கை
     கொள்வோன் றன்மை கோடன் மரபென
     ஈரிரண் டென்ப பொதுவின் றொகையே” (தொல். சிற. பாயி. இளம்.)

     என்பாரும்16 உளராலோ எனின் பாயிரம் கூறுதல் நூல்கட்கு அன்றிப் பிறவற்றிற்கு
அன்றே? அங்ஙனம் ஆதலின் நூல்களின் வரலாறு ஒன்றுமே கூற வேண்டும். அதனோடு
ஆசிரியன் வரலாறு முதலிய நான்கினையும் உடன் கூறுதல் வரலாற்று முறைமையின்
வாராதார் நூல்களைக் கற்பிக்கவும் கற்கவும் புகின்,

     “பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
     பேதை வினைமேற் கொளின் (குறள். 836)

     என்றவாறேயாய் நூல்கள் அருமையும் பெருமையும் கெட்டுப் பயன்படாவாம்
என்பது கருதி என்க.

    அங்ஙனம் ஆயின் நூல்முகத்து உரைக்கப்படும் பாயிர உறுப்பினுள் நூலைக்
கூறுவது பொருந்தாது எனின் இவ்விலக்கணத்தான் அமைபவன் ஆசிரியன்
என்றாற்போல இவ்விலக்கணத்தான் அமைவது நூல் என்றதன்றிப் பாயிரத்துள் நூலைக்
கூறியது அன்றாம். ஆதலின் ஆசிரியர் தொல்காப்பியர் நூலின் இயல்பை ஓத்துறுப்பாகிய
மரபியலுள் கூறினாற்போல இவ்வாசிரியர் பாயிர உறுப்பினுள் கூறினார் என்க. (3)
---------------------------
     16என்பார் என்பது களவியல் உரையாசிரியர் (இறை. 1) இளம்பூரணர்,
நச்சினார்க்கினியர் (தொல். சிற. பாயி.), நேமிநாத உரையாசிரியர் (நேமி. பாயி.),
வைத்தியநாததேசிகர் (இல. விள. பொது. பாயி.) முதலியோரைக் குறிக்கலாம்.