பக்கம் எண் : 121
  

நன்னூல் விருத்தியுரை
 

நூலின் வரலாறு
 

4.

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.
 
     எ-னின், மேற் கூறிய ஐந்தனுள் (3) நூலினது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: மேற் கூறிய ஐந்தனுள் நூலினது வரலாற்றைச் சொல்லின
 இருவகைப்பாயிரத்தையும் முன் உடைத்து ஆதல் முதலாக இங்ஙனம் விகற்பித்த
பதினொரு விகற்பநடைகளைப்17 பெற்று வரும் எ-று. (4)
 

நூல்களின் வகை
 

5.

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும்.
 
     எ-னின்18 நூலினது வரலாற்றைத் தொகுத்துக் (4) கூறினார்; அவற்றுள் ஓரிரு
பாயிரத்திற்கு வகை போந்து கிடந்தமையின் (2) அதனை ஒழித்து, ஏனையவற்றை
வகுத்துக் கூறுவான் தொடங்கி, “மும்மையி னொன்றாய்” (நூ. 4) என்றதனை வகுத்து
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: முதல்நூல், வழிநூல், சார்புநூல் என மூன்று கூற்றதாம் நூல் எ-று. (5)
 

முதல் நூல்
 

6.

அவற்றுள்,
வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்.
-----------------------------
     17“பதின்மூன்று விகற்பநடைகளைப் பெற்று வரும்.” என்பது ஆறுமுக
நாவலர் பாடம்.
     18பாயிர நூற்பாக்களில் பலவற்றை (நூ. 5, 7, 8, 10, 11, 12, 13, 17, 20, 37,
39, 40, 41, 44, 45, 46, 47, 48, 52, 54) இறையனார் அகப்பொருள் உரை (நூ.
1) யாப்பருங்கல விருத்தி (பாயி., நூ. 95), வீரசோழிய உரை (நூ. 178),
இளம்பூரணர் உரை (தொல். சிற. பாயி.) முதலியவற்றிலும் காணலாம். சில
நூற்பாக்களில் சிறு வேறுபாடுகள் உண்டு; ஒருசில உரைநடையிலும
அமைந்துள்ளன.