பக்கம் எண் : 122
  

நன்னூல் விருத்தியுரை
 

     எ-னின்19 நூல் மூன்றனுள் முதல்நூல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: வினையின் நீக்கி விளக்கப்படும் அறிவினை உடைய உயிர்கட்கு வினையின்
நீங்கி விளங்கிய அறிவினை உடைய முதல்வன் ஆதிக்கண்ணே செய்தது யாது. அது
முதல்நூல் ஆம் எ-று. (6)
 

வழிநூல்
 

7.

முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்.
 
     எ-னின், வழிநூல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: தொல்லாசிரியர் நூல்களின் பொருள்முடிபு முழுவதும் ஒத்து, வழிநூல்
செய்வோன் முதல்நூல் உளதாகவும் தான் வழிநூல் செய்தற்குக் காரணமாக வேண்டிய
விகற்பங்களையும் உடன் கூறி, அவ்விகற்பங்கள் உணர்வுடையோர் பலர்க்கும் ஒப்ப
முடிந்தமையின் அழியாது உலகத்து நின்று நிலவும் மரபினை உடையது வழிநூல் ஆம்
எ-று.

     ‘பின்னோன் வேண்டும் விகற்பம்’ கூறலாவது, “பழையன கழிதலும் புதியன
புகுதலும், வழுவல” (நூ. 462) என்றவற்றை, “இறந்தது விலக்க லெதிரது போற்றல்”
(நூ. 14) என்னும் உத்திகளான் விலக்கியும் போற்றியும் கூறுதல் முதலியன.

     “முனைவன் கண்டது முதனூ லாகும்” (நூ. 6) என ஒருமையாற் கூறினார் ஈண்டு,
‘முன்னோர் நூல்’ எனப் பன்மையாற் கூறியது இறைவன் நூலையும் அவன் அருள்
வழிப்பட்டுத் தத்தம் மரபின் வரும் குரவர் பலர் நூலையும் தழீஇக்கோடற்கு என்க.
எனவே முதல்நூல் மாத்திரையாய் நிற்பது இறைவன் நூலும் வழிநூல் மாத்திரையாய்
நிற்பது இறுதிநூலும் அன்றி இடை நிற்கும் நூல்கள் எல்லாம் ஒருவற்கு மைந்தன்
ஆயினான் மற்றொருவற்குத் தந்தை ஆயினாற்போல முதல்நூலாயும் வழிநூலாயும்
நிற்கும் என்பது பெற்றாம். (7)
 

சார்புநூல்
 

8.

இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்.
------------------------------
     19இது தொல்காப்பிய (மரபு. 96) நூற்பா.