பக்கம் எண் : 125
  

நன்னூல் விருத்தியுரை
 


 

கூறியது கூறன் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தன் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுத னின்றுபய னின்மை
என்றிவை யீரைங் குற்ற நூற்கே.

 

     எ-னின், “ஐயிரு குற்றம்” (நூ. 4) என்றதனை23 வகுத்து உணர்த்துதல்
நுதலிற்று.

     இ-ள்: நூற்குப் பத்துக் குற்றங்களாவன குன்றக் கூறல் முதலிய இவைகளாம்
எ-று.

     நூல்கள் இக்குற்றங்கள்24 சாராது வருதல் காண்க. (12)
 

அழகு பத்து
 

13.

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.
    
     எ-னின், பத்து அழகு என்றதனை (4) வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: நூலிற்கு அழகு என்று சொல்லப்படும் பத்தாவன சுருங்கச் சொல்லல் முதலியவாம் எ-று.

     நூல்கள் இப்பத்து அழகோடும்25 கூடி வருதல் காண்க. (13)


உத்தி முப்பத்திரண்டு
 

{14}

நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்
இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்
  
------------------------------
     23“பத்துக் குற்றம் என்றதனை” என்பது ஆறுமுக நாவலர் பாடம்.
     24நூ. 121, 137, 265, 286, 293, 295, 348, 360, 378, 406, 412, 449, 460
முதலியவற்றின் உரைகளில் இவற்றுள் சிலவற்றைக் காண்க.
     25இவற்றுள் சில நூ. 116, 137, 406, 460 முதலியவற்றின் உரைகளில்
பேசப்படுகின்றன.