| நன்னூல் விருத்தியுரை |
| படுத்துக் கூறாது, சிலவற்றைக் கூறியது என்னை எனின் வரம்பின்றி வரும் உத்தியுள் தலைமைபற்றிக் கூறும் முப்பத்திரண்டில்29 வந்தன கூறினார் என்க. (14) |
|
| உத்தியின் இலக்கணம் |
| 15. | நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி. |
எ-னின், மேல் தொகுத்தும் (4) வகுத்தும் (14) கூறிய உத்திக்கு இலக்கணம உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஓர் இலக்கண நூலால் உணர்த்தப்படும் பொருளை நூல் வழக்கோடும் உலக வழக்கோடும் பொருந்த உணர்த்தி, அப்பொருளை மற்றோர் இலக்கிய நூற்கண்ணும் ஏற்கும் இடம் அறிந்து, இவ்விடத்திற்கு இஃது ஆம் எனக் கருதித், தக்க வகையாகச் செலுத்துவது தந்திர உத்தியாம் எ-று. தந்திரம் என்பது நூல். உத்தியான் அமைக்கும் பொருளை உத்தி என்றது ஆகுபெயர். (15) |
| ஓத்து |
| 16. | நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். |
எ-னின்30 இருவகை உறுப்பினுள் (4) ஓத்துறுப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒரு சாதியாய் உள்ள மணிகளை முறையே பதித்தாற்போல ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒரு வழிப்படக் கூறுவது ஓத்துறுப்பாம் எனச் சொல்லுவர உயிர்க்கு உறுதி பயக்கும் மெய்ம்மொழிகளை உடைய புலவர் எ-று. நேர்தல்- ஒன்றுபடுதல். இவ்வாறு வருதல் இந்நூல் உறுப்பினுள் காண்க. (16) ---------------------------- 29தொல்காப்பியம் (மரபு. 112), மாறனலங்காரம் (நூ. 25) முதலிய நூல்கள் வேறு சில உத்திகளைக் கூறும். 30இது தொல்காப்பிய (செய். 163) நூற்பா. |