பக்கம் எண் : 128
  

நன்னூல் விருத்தியுரை
 

படலம்
 

17.

ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரி னதுபடல மாகும்.
 
     எ-னின்31 படல உறுப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: ஒரு வழிப்படாது விராய பொருளோடு பொருந்திப், பல பொருளை
உணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழியின்றித் தொடர்ந்து வரின் அது படல உறுப்பு
ஆம் எ-று.

     படல உறுப்பினை உடைய காப்பியங்களுள் பாட்டுடைத் தலைவனது சரிதையே
அன்றி மலை, கடல், நாடு முதலிய பல பொருள் திறங்களும் விரவி வருதலும் பல
பொருளை உணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழியன்றித் தொடர்ந்து வருதலும்
காண்க. (17)
    

சூத்திரம்
 

{18} 

சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்.
 
     எ-னின், சூத்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: சிறிய கண்ணாடியில் பெரிய சரீரம் முதலியவற்றின் சாயை செவ்வாகச்
செறிந்து இனிதாக விளங்கினாற்போலச் செவ்வாகச் செறிந்து இனிதாக விளங்கச்
சில்வகை எழுத்துக்களான் இயன்ற யாப்பின்கண் பல்வகைப்பட்ட பொருள்களைச
செவ்வாகச் செறித்து இனிதாக விளக்கி, அப் பல பொருள் திண்மையும் நுண்மையும்
சிறந்து வருவன சூத்திரங்களாம் எ-று.

     திட்பம்- குற்றம் இன்மையின் அலைவற நிற்றல்.

     இவ்வாறு வருதல் இச்சூத்திரத்துள்ளும் காண்க. (18)
 

சூத்திரநிலை
 

19.

ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை.
 
-----------------------------
     31இது தொல்காப்பிய (செய். 164) நூற்பா.