பதிப்புரை | சீயங்கன் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி புரிந்திருக்கிறான் என்று தெரிகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக்குப் பின்னரும் சீயங்கன் ஆட்சியில் இருந்த செய்தியை வேறொரு கல்வெட்டு குறிப்பிடுவதாக வையாபுரிப் பிள்ளை கூறுகிறார். அவர் குறிப்பிடுவது கோப்பெருஞ்சிங்கன் காலத்துக் கல்வெட்டு. அவன் குலோத்துங்கனின் மகனாகிய மூன்றாம் இராசராசனைச் சிறைப் பிடித்த பல்லவ மரபினன் என்பது வரலாறு. அவனது ஆட்சிக் காலம் கி. பி. 1243 வரை நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அடங்கிய சிற்றரசனாகவும் சீயங்கன் ஆட்சி புரிந்துள்ள செய்தி மேலே குறிப்பிடப்பட்ட கல்வெட்டால் தெரிய வருகிறது. அதனால் சீயங்கனின் காலம் கி. பி. 1200-1250 என்று அவர்10 அறுதியிடுகிறார். ஆகவே பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றிய காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று துணிந்து கூறலாம். | நன்னூல் | நன்னூல் எளிமையும் தெளிவும் கொண்ட நல்ல இலக்கணம்; செறிவும் சுருக்கமும் வாய்க்கப் பெற்றது. சொல்லில் நயம், பொருளில் வளம், முறையில் ஒழுங்கு, அமைப்பில் அழகு, நடையில் எளிமை முதலிய சிறப்பியல்புகள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்ற புதுநூல். அதிகாரம், இயல், சூத்திரம் ஆகியவற்றின் தொகையிலும் நூற்பாக்களின் அடியளவிலும் தொல்காப்பியத்தை விட நன்னூல் மிகவும் சுருங்கியது. தமிழ்மரபு செய்யுள்மரபு. இது மனப்பாடக் கல்விக்கு ஏற்றது. செய்யுளின் அளவு குறைந்து எதுகை மோனைகளோடு இன்னோசையும் இணைந்துவிட்டால் மனப்பாடம் செய்வது எளிது; மனனம் செய்த பாடம் நினைவில் நிற்கும். செய்யுளுக்கு வரையறை (நன்.268) கூறிய பவணந்தி முனிவர் நூற்பாவும் செய்யுள் என்பதை அறிவார். ஆகவே நன்னூலின் பெரும்பகுதி நூற்பாக்களை அவர் ஓரடி, ஈரடி கொண்டனவாகவும் தொடைநயம், ஒலிநயம் உடையனவாகவும் இயற்றினார். அடுத்து வரும், “இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில் அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே.” “இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை.” __________________________ 10எஸ். வையாபுரிப் பிள்ளை, 1968. பக். 185. | |
|
|