பக்கம் எண் : 131
  

நன்னூல் விருத்தியுரை
 

வேண்டுழி விரித்து உரைத்தல். அதிகாரமாவது: எடுத்துக்கொண்ட அதிகாரம் இது
ஆதலின் இச்சூத்திரத்து அதிகரித்த பொருள் இது என அவ்வதிகாரத்தோடு பொருந்த
உரைக்க வேண்டுழி உரைத்தல். துணிவாவது: ஐயுறக் கிடந்துழி இதற்கு இதுவே பொருள்
என உரைத்தல். ஏனைய36 பொருள் விளங்கிக் கிடந்தன.

     இப்பதினான்கும் இவ்வுரைகள் வந்துழி வந்துழிக்37 காட்டுதும்; ஆங்காங்கு
உணர்க. (21)


காண்டிகையுரை
 

22.

கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானுஞ்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை
 
    
     எ-னின், காண்டிகையுரை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: மேற் கூறிய பதினான்கினுள் (21) கருத்துரையும் பதப்பொருளும்
உதாரணமும் ஆகிய மூன்றனையும் உரைத்தலானும் அம்மூன்றனோடு வினா, விடை
என்னும் இரண்டனையும் கூட்டி உரைத்தலானும் சூத்திரத்துட்பொருளை விளக்குவன
காண்டிகையுரைகளாம் எ-று. (22)
 

விருத்தியுரை
 

23.

சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
கின்றி யமையா யாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறநூ லானும்
ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.
 
     எ-னின், விருத்தியுரை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: காண்டிகையுரைபோல் சூத்திரத்துட்பொருள் விளக்குதல் மாத்திரையின்
நில்லாது, அவ்விடங்கட்கு இன்றியமையாத பொருள்கள் யாவையும் விளங்கத், தான்
உரைக்கும் உரையானும் ஆசிரிய வசனங்களானும் மேற் கூறிய காண்டிகை உறுப்பு
ஐந்தனானும் ஐயம் தீரச், சுருங்காது மெய்ம்மைப் பொருளை விரித்து உரைப்பது விருத்தியுரையாம் எ-று.
-----------------------------
     36‘பாடம்’ என்பது மூலபாடமும் பாடபேதமும் என்றும், ‘சொற்பொருள்’ என்பது
பதவுரை என்றும், ‘தொகுத்துரை’ என்பது பொழிப்புரை என்றும் இராமாநுச கவிராயர்
(நன். 21) கூறுவார்.
     37காட்டிய இடங்களில் சில. நூ. 14, 110, 207, 344.