பக்கம் எண் : 133
  

நன்னூல் விருத்தியுரை
 

ஆசிரியன் வரலாறு
 

26.

குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
அமைபவ னூலுரை யாசிரி யன்னே.
    
     எ-னின், நிறுத்த முறையானே (3) ஆசிரியனது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இவ்வியல்பினை உடையார் கற்பிக்கும் ஆசிரியர் ஆவார் எ-று.
(26)
 

நிலத்தின் மாட்சி
 

27.

தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே.
 
     எ-னின், மேற் கூறிய உவமையை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: நிலத்தினது மாட்சிமை இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று எ-று. (27)
 

மலையின் மாட்சி
 

28.

அளக்க லாகா வளவும் பொருளுந்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: மலையினது மாட்சிமை இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று எ-று. (28)
 

நிறைகோலின் மாட்சி
 

29.

ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: நிறைகோலினது மாட்சிமை இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று எ-று. (29)