பக்கம் எண் : 134
  

நன்னூல் விருத்தியுரை
 

மலரின் மாட்சி
 

30.

மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே.
 
    
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: மலரினது மாட்சிமை இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று எ-று.

     இவ்வுவமைகளினது மாட்சிமைபோலப் பொருளினது மாட்சிமையும் விரித்து உரைத்துக்கொள்க. (30)
 

ஆசிரியர் ஆகாதவர்
 

31.

மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலுங்
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோ ரிலரா சிரியரா குதலே.
 
    
     எ-னின், ஆசிரியர் ஆகார் இவர் என உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இக்குற்றங்களை உடையோர் கற்பிக்கும் ஆசிரியர் ஆகார் எ-று.
(31)
 

கழற்குடத்தின் தன்மை
 

32.

பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றருஞ்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே.
 
     எ-னின், மேற் கூறிய உவமையை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: கழற் பெய்த குடத்தின் குற்றம் இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று
எ-று. (32)


மடற்பனையின் தன்மை
 

33. தானே தரக்கொளி னன்றித் தன்பான்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை.

     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: மடற்பனையின் குற்றம் இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று எ-று.